மும்பை தாக்குதல் வழக்கு: ஹபீசை விடுவித்தது பாக்., கோர்ட்

தினமலர்  தினமலர்
மும்பை தாக்குதல் வழக்கு: ஹபீசை விடுவித்தது பாக்., கோர்ட்

இஸ்லாமாபாத் : மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சையதை, பாகிஸ்தான் ஐகோர்ட் மும்பை தாக்குதல் வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ளது.
மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கு பாகிஸ்தானின் லாகூர் ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கு ஹபீஸ் மூளையாக இருந்து செயல்பட்டது நிரூபிக்கப்பட்டதாலும், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இருந்து ஈடுபட்டதாலும் பஞ்சாப் அரசு, ஹபீசை வீட்டு காவலில் வைத்தது. இந்த வீட்டுக் காவலை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்க பஞ்சாப் அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து ஹபீசும் மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில், இன்று இவ்விரு மனுக்களையும் விசாரித்த லாகூர் ஐகோர்ட், ஹபீஸ் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்களை தாக்கல் செய்ய அரசு தவறி விட்டதாக கூறி, ஹபீசை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது. பாக்., பாதுகாப்பு துறை சார்பில் தாக்குதல் செய்யப்பட்ட சில முக்கிய ஆதாரங்களும், ஹபீஸ் மீதான குற்றத்தை நிரூபிக்க போதுமானதாக இல்லை என ஐகோர்ட் கூறி உள்ளது.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் பயங்கரவாத சட்டத்தின் கீழ் குற்றவாளியை தண்டிக்க பாகிஸ்தான் தவறி விட்டது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. ஹபீசை விடுதலை செய்தால் பாக்.,க்கு அளிக்கப்பட்டு வரும் உதவிகளை நிறுத்த போவதாக ஏற்கனவே சர்வதேச அமைப்புக்கள் கூறி வந்தன. இந்நிலையில் தற்போது ஹபீஸ் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நாடுகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி இருக்கும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் ஆழ்ந்துள்ளது.

மூலக்கதை