ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை ஐந்தாவது இடத்துக்கு முன்னேறினார் கோஹ்லி

தினகரன்  தினகரன்

துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இலங்கை அணியுடன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான கோஹ்லி, 2வது இன்னிங்சில் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார். டெஸ்டில் தனது 18வது சதத்தை பதிவு செய்ததுடன், அதிவிரைவாக 50வது சர்வதேச சதம் விளாசிய சாதனையை தென் ஆப்ரிக்காவின் ஹாஷிம் அம்லாவுடன் பகிர்ந்து கொண்டார்.இந்த அபார ஆட்டத்தின் மூலம் அவர், ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 5வது இடத்தை பிடித்தா. ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இலங்கை டெஸ்ட் தொடருக்கு பிறகு, கடினமான தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் வகையில் கோஹ்லி ஓய்வெடுக்க உள்ள நிலையில், ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் வார்னர் ரேங்கிங்கில் முன்னேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆஸி. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன், இந்தியாவின் செதேஷ்வர் புஜாரா அடுத்த இடங்களில் உள்ளனர். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜடேஜா 3வது இடத்துக்கு பின்தங்கினார். அஷ்வின் 4வது இடத்தில் உள்ளார். கொல்கத்தா டெஸ்டில் சுழற்பந்துவீச்சு சுத்தமாக எடுபடாததால், இவர்கள் இருவரும் பெரிதாக சாதிக்க முடியவில்லை. ஜடேஜா இரு இன்னிங்சிலும் தலா 1 ஓவர் மட்டுமே வீச வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது.

மூலக்கதை