மகளிர் டி20: ஆஸி.யை வீழ்த்தியது இங்கிலாந்து

தினகரன்  தினகரன்

கான்பெரா : ஆஸ்திரேலிய மகளிர் அணியுடனான 3வது டி20 போட்டியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து மகளிர் அணி டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் அடங்கிய ஆஷஸ் தொடரில் விளையாடியது. ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 4-2 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில், டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. முதல் டி20 போட்டியில் வென்ற ஆஸி. அணி மொத்தம் 8 புள்ளிகளை பெற்று ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.2வது டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 6-8 என புள்ளி வித்தியாசத்தை குறைத்த நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி கான்பெராவில் நேற்று நடந்தது. டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்தது. தொடக்க வீராங்கனை பெத் மூனி அதிரடியாக 117 ரன் (70 பந்து, 19 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 19 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீராங்கனை டேனியல் வியாத் 57 பந்தில் 13 பவுண்டரி, 2 சிக்சருடன் 100 ரன் விளாசி வெற்றிக்கு உதவினார். கேப்டன் ஹீதர் நைட் 51 ரன் (37 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். இரு அணிகளும் தலா 8 புள்ளிகள் பெற்று தொடரை சமன் செய்த நிலையில், கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்த ஆஸி. அணி ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. இங்கிலாந்தின் டேனியல் வியாத் ஆட்ட நாயகி விருதும், அந்த அணியின் கேப்டன் ஹீதர் நைட் தொடர் நாயகி விருதும் பெற்றனர்.

மூலக்கதை