பழைய ஸ்டாக் என்ற சாக்குப்போக்கு கூடாது: புதிய ஜிஎஸ்டி விகிதத்துக்கு ஏற்பவிலை குறைக்காவிட்டால் நடவடிக்கை

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பொருட்களின் விலையை குறைக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 176 பொருட்கள் 28 சதவீத ஜிஎஸ்டியில் இருந்து 18 சதவீதமாகவும் 2 பொருட்கள் 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டன. இதுதவிர சில பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி 200க்கும் மேற்பட்ட பொருட்களின் மீதான வரி குறைந்துள்ளது. இதன் பலனை நுகர்வோருக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.  இதுகுறித்து நிதித்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா கூறியதாவது: ஜிஎஸ்டியில் விலை குறைக்கப்பட்ட பொருட்களுக்கு விலையை குறைக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள ஸ்டாக்குகளை விற்பதாக கூறி விலையை குறைக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. புதிய வரி கடந்த 15ம் தேதி முதல் அமலுக்கு வந்து விட்டது. எனவே, அந்த தேதியில் இருந்தே பலன் வழங்கப்பட வேண்டும். வரி குறைப்புக்கு ஏற்ப விலையை குறைத்து விற்கிறார்களா என ஒவ்வொரு சில்லரை வர்த்தகரையும் நாங்கள் கண்காணிக்க முடியாது. எனவே, அந்த பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, உடனடியாக விலையை மாற்றி அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  வரி குறைப்பால் எந்த பொருளுக்கு எவ்வளவு விலை குறைந்துள்ளது, புதிய விலை எவ்வளவு என்று நுகர்வோர் நிறுவனங்கள் செய்தித்தாள்கள், ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும். சோப்பு, சூட்கேஸ், அழகுசாதன பொருட்கள், சாக்லேட்டுகள், மார்பிள் மற்றும் கிரானைட், வால்பேப்பர், பிளைவுட், எழுதுபொருட்கள் உள்பட ஏராளமான பொருட்களுக்கு வரி குறைந்துள்ளது. எனவே, விலையை குறைத்து விநியோகஸ்தர்கள் முதல், மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் வரை நுகர்வோருகு–்கு அதன் பலனை சென்றடைய செய்ய வேண்டியது உற்பத்தி நிறுவனங்களின் கடமை. புதிய விலையை குறிப்பிட டிசம்பர் மாதம் வரை அவகாசம் என்பது, டிசம்பர் வரை காத்திருக்க வேண்டும் என்ற பொருளில் அல்ல. விலை உடனே குறைக்கப்பட வேண்டியது அவசியம். தவறு கண்டறியப்பட்டால் நுகர்வோர் அல்லது அரசுக்கு வித்தியாசத்தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனம் அளிக்க வேண்டி வரும். இவ்வாறு ஹஷ்முக் ஆதியா தெரிவித்தார். ஜிஎஸ்டி விலை குறைப்பை அமல்படுத்துவதை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவுக்கு 39 புகார்கள் வந்துள்ளதாகவும், இவற்றில் 38 ஹரியானாவில் ரியல் எஸ்டேட் தொடர்பாக அளிக்கப்பட்டவை எனவும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பொருட்களுக்கு விலையை உடனே குறைக்க வேண்டும். புதிய விலையை பேக்கேஜ் மீது குறிப்பிட அளித்த அவகாசம், விலை குறைப்புக்குதானே தவிர, ஒத்திப்போடுவதற்கு அல்ல. விநியோகஸ்தர், மொத்த வியாபாரி, சில்லரை வர்த்தகர் வரை விலையை குறைத்து நுகர்வோர் பலன் அடைவதை உறுதி செய்ய வேண்டியது நிறுவனங்களின் கடமை. உடனே விலையை குறித்து விளம்பரப்படுத்த வேண்டும். பலனை அளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை பாயும்.

மூலக்கதை