20 காரட் தங்க நகைக்கு, 'ஹால்மார்க்' - வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை

தினமலர்  தினமலர்
20 காரட் தங்க நகைக்கு, ஹால்மார்க்  வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை

புதுடில்லி : 'மத்திய அரசு, 20 காரட் தங்க நகைகளுக்கும், 'ஹால்மார்க்' முத்திரையை அறிமுகப்படுத்த வேண்டும்' என, இந்திய வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, இந்த அமைப்பு, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வானுக்கு எழுதியுள்ள கடிதம்: மத்திய அரசு, தங்கத்தின் தரத்தை குறிக்கும் வகையில், 14, 18 மற்றும், 22 காரட் ஆபரணங்களுக்கு, 'ஹால்மார்க்' முத்திரையை, ஜனவரி முதல் கட்டாயம் ஆக்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.

இந்த மூன்று வகையான தர நிர்ணயம், சர்வதேச அளவில் பின்பற்றப்படுகின்றன. எனினும், இந்தியாவிற்கு என, கூடுதலாக புதிய தர நிர்ணய அளவை அறிமுகம் செய்ய வேண்டும்.தங்கத்தின் தரத்தை குறிக்கும் வகையில், 83.3 சதவீத துாய்மையைக் கொண்ட, 20 காரட் தங்க நகைகளுக்கும், 'ஹால்மார்க்' சான்று வழங்க வேண்டும்.

இதனால், எளிய மக்களும் தங்களுக்கு தேவையான தரத்தில் தங்க நகைகளை வாங்க முடியும். அத்துடன், நுகர்வோர் மற்றும் நகை வியாபாரிகள் இடையிலான நம்பகத்தன்மையும், பொறுப்பும் அதிகரிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை