1.36 லட்சம் மரக்கன்று இலக்கு பூர்த்தி... விவசாயிகளால் பசுமைப்பரப்பு அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
1.36 லட்சம் மரக்கன்று இலக்கு பூர்த்தி... விவசாயிகளால் பசுமைப்பரப்பு அதிகரிப்பு

திருப்பூர் : தென் மேற்கு பருவ மழை கைகொடுத்ததால், 1.36 லட்சம் மரக்கன்று என்ற இலக்கை வன விரிவாக்க மையம் நிறைவு செய்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், வனத்துறை சார்பில், செவந்தாம்பாளையத்தில், வன விரிவாக்க மையம் மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, கன்னியாகுமரியிலிருந்து, திருப்பூருக்கு வனச்சரக அலுவலர் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் மாற்றப்பட்டு, மையம் செயல்பட துவங்கியுள்ளது.இந்த மையத்தின் மூலம், பசுமை பரப்பை அதிகரிப்பது மற்றும் மரப்பயிர் சாகுபடியில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.மேலும், மரக்கன்றுகள் வளர்ப்பு மற்றும் பயிற்சி பணிகளும் நடக்கிறது. பல இடங்களில் நாற்றுப்பண்ணைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ், தனியார் நிலங்களில் மரம் வளர்க்கும் திட்டத்தில், நடப்பு ஆண்டு திருப்பூர் மாவட்டத்துக்கு, 1.36 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தேக்கு, மலைவேம்பு, வேம்பு, பலா, பெருநெல்லி, புளி, பெருமரம், நாவல், மகா கனி, இலுப்பை என, பல வகையான விதை நடவு செய்து, நாற்றுக்களாக வளர்க்கப்படுகிறது. குறிப்பிட்ட கிராமங்களை தேர்வு செய்து, விவசாயிகளுக்கு, மரப்பயிர் சாகுபடி குறித்து விளக்கப்படுகிறது. நடவுக்கான மானியம், தொழில் நுட்ப உதவிகளும், மூன்று ஆண்டுக்கு பிறகு, விவசாய நிலங்களில் ஆய்வு செய்து, வளர்க்கப்
பட்டுள்ள மரங்களுக்கு, ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், ஆண்டு மழை பொழிவில், வட கிழக்கு பருவ மழையின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். அதனால், மரக்கன்றுகள், நவ.. மற்றும் டிச., மாதங்களில் நடவுக்கு வழங்கப்படும். ஆனால், இந்தாண்டு தென் மேற்கு பருவ மழை சராசரியை விட, பல மடங்கு அதிகரித்து, 386.01 மி.மீ., மழை பெய்தது. இதனால், மரக்கன்றுகளை நடுவதில் விவசாயிகள் தீவிரம் காட்டியதால், இலக்கு நிறைவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்காக, நாற்றுப்பண்ணை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து, வனவியல் விரிவாக்க அலுவலர் ஸ்ரீ காந்த் கூறுகையில், ""பசுமை பரப்பை அதிகரிக்க வேண்டிய சூழலில், மரப்பயிர் சாகுபடியில் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.""திருப்பூர் நகரை சுற்றியுள்ள ஒரு சில விவசாயிகள், மரப்பயிர் சாகுபடி, அவற்றால் கிடைக்கும் பலன் என்ன என்பதை தாண்டி, நிலம் முழுவதும் வனம் போல் மாற்றக்கூட, மரக்கன்றுகள் கேட்கின்றனர். ""அந்தளவுக்கு, பசுமை மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. பதிவு செய்த விவசாயிகளுக்கு, நாற்றுப்பண்ணையில் குறைந்தளவு நாற்றுக்களே உள்ளன. ""வரும், 201819க்கு, 1.40 லட்சம் மரக்கன்று வளர்க்க அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, டிச., மாதத்தில், நாற்று உற்பத்தி பணிகள் துவங்கும்,'' என்றார்.

மூலக்கதை