அரசு பஸ்கள் 'ஜப்தி' செய்து முடக்கம்; விபத்தால் பாதிக்கப்பட்டோர் கலக்கம்

தினமலர்  தினமலர்
அரசு பஸ்கள் ஜப்தி செய்து முடக்கம்; விபத்தால் பாதிக்கப்பட்டோர் கலக்கம்

கோவை : தமிழகத்திலுள்ள அரசு பஸ்களுக்கு காப்பீடு இல்லாததால், அவற்றால் ஏற்படும் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. இதனால், அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டு, போக்குவரத்து கழக டெப்போக்களில் முடக்கப்படுகின்றன; விபத்தில் சிக்கியவர்கள் இழப்பீடு பெற முடியாமல் பரிதவிக்கின்றனர்.

மோட்டார் வாகன விபத்துக்களில் காயம்பட்டவர்கள், இழப்பீடு கேட்டுதாக்கல் செய்யப்படும் வழக்குகள், எம்.சி.ஓ.பி., சிறப்பு கோர்ட்டிலும்;விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், இழப்பீடு கோரும் வழக்குகள் கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டிலும் விசாரணை நடத்தப்படுகிறது.இது தவிர, இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடத்தப்படும் லோக் அதாலத் விசாரணையிலும், மோட்டார் வாகன விபத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சமரச தீர்வு காணப்படுகிறது.

விபத்து வழக்கில்விசாரணை முடிந்து, இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டு, 60 நாட்களுக்குள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பணத்தை செலுத்த வேண்டும். இழப்பீடு தொகை அதிகமாக இருப்பதாக கருதினால், இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் அப்பீல் செய்யலாம். அதே போல, இழப்பீடு தொகை குறைவாக இருக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்கள் அப்பீலுக்கு போகலாம்.இன்சூரன்ஸ் நிறுவனங்கள், கோர்ட் உத்தரவுக்கு பிறகு, முறையாக இழப்பீட்டு தொகையினை செலுத்துகின்றனர். ஆனால், கோர்ட் தீர்ப்பு கூறப்பட்டு பல ஆண்டுகளாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் அரசு போக்குவரத்துகழகம் இழுத்தடிக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க தவறும் போது, அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்படுகின்றன. ஜப்தி செய்யப்பட்ட பிறகும் பணத்தை செலுத்த அரசு போக்குவரத்து கழகம்முயற்சி எடுப்பதில்லை. கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான, 30க்கும் மேற்பட்ட பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டு டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.ஜப்தியான பஸ்களை கோர்ட் உத்தரவின் பேரில் ஏலம் விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால், அரசு பஸ்களை ஏலம் எடுக்க ஆட்கள் யாரும் முன் வருவதில்லை.

ஜப்தி பஸ்களுக்கு, இழப்பீடு தொகை வழங்குமாறு, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளை கேட்டால், அவர்கள் முறையான பதில் அளிப்பதில்லை. 'கோவை கோட்டத்திற்கு சுமார் மூன்று கோடி ரூபாய் வரை மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது என்றும்,அரசு ஒதுக்குவதை விட பல மடங்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டியிருப்பதால், குறைந்த பட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரைஇழப்பீடு வழங்க அதிகாரம் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரூ.250 கோடி நிலுவை:

அரசு பஸ்சில் சிக்கிவிபத்துக்குள்ளானவர்களுக்கு, வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகை,1991-92ல், 16 கோடி ரூபாய் நிலுவையில் இருந்தது. 2009-10ல், 190 கோடியாகஅதிகரித்து,தற்போது,250 கோடி ரூபாய் நிலுவைத்தொகை செலுத்தவேண்டியுள்ளது. இழப்பீடு தொகை செலுத்த தவறியதால், 700க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டுமுடக்கப்பட்டுள்ளன.

வக்கீல்கள் கூறியதாவது: விபத்து வழக்கில், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இழப்பீடு தொகையைவழங்கிவிடுகின்றனர். ஆனால் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து இழப்பீடு தொகை பெற முடிவதில்லை. தீர்ப்பு அளிக்கப்பட்டு, ௧௦ ஆண்டுகள் வரை இழுத்தடிப்பதால், வட்டி தொகை பல மடங்கு அதிகரிக்கிறது.இதனால், அரசு போக்குவரத்து கழகத்திற்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது.கேரளாவில், அரசு போக்கு வரத்து கழக பஸ்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காப்பீடு செய்யப்படுகின்றன. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உடனுக்குடன் இழப்பீட்டு தொகை வழங்கிவிடுகின்றன.

மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலத்தில் மட்டும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இன்சூரன்ஸ் செய்யப்படுதில்லை. எனவே மற்ற மாநிலங்களை போல, அரசு பஸ்களை இன்சூரன்ஸ் செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஆண்டுக்கு 800 பஸ்கள்!
அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், ஆண்டுக்கு 800 பஸ்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. விபத்து இழப்பீட்டு தொகையாக ஆண்டிற்கு 30 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், மூன்று கோடி ரூபாய் வரை மட்டுமே இழப்பீட்டிற்காக நிதி ஒதுக்கப்படுகிறது. 10 சதவீதம் மட்டுமே இழப்பீடு தொகை ஒதுக்குவதால், அரசு பஸ்சை ஜப்தி செய்யப்படுவது தவிர்க்க முடியாததாகிறது.போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தையும் இன்சூரன்ஸ் செய்தால், அதிகபட்சமாக, ஒரு ஆண்டிற்கு எட்டு கோடி ரூபாய் இன்சூரன்ஸ் கட்ட வேண்டியிருக்கும். இன்சூரன்ஸ் செய்வதால், அரசு போக்குவரத்து கழகத்திற்கு லாபம் ஏற்படும்.

மூலக்கதை