கடும் வெயில், பனியால் மானாவாரி பயிர்கள்...பாதிப்பு:வேதனையில் விவசாயிகள்

தினமலர்  தினமலர்

ஆண்டிபட்டி;ஆண்டிபட்டியில் மழையில்லாமல் பகலில் கடும் வெயில், இரவில் நிலவும் வறண்ட பனியால் மானாவாரி பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.ஆண்டிபட்டி பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, காய்கறிகள் நடவு செய்துள்ளனர். முன்கூட்டியே பெய்த தென்மேற்கு பருவமழையில் நடவு செய்த பயிர்கள் மட்டும் தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது.
தாமதமாக விதைப்பு செய்யப்பட்ட பல நுாறு ஏக்கர் நிலங்களில் தற்போது செடிகள் வளர்ந்த நிலையில் உள்ளது.வளர்ந்த பயிர்களுக்கு கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான மழை இல்லை. தற்போதுள்ள சூழலில் பகலில் கடும் வெயிலும், இரவில் வறண்ட பனியும் நிலவுகிறது. இதனால் காய்கறி செடிகள், பயறு வகைகளில் பூக்கள், பிஞ்சுகள் எடுத்துள்ள நிலையில், சிறு தானிய பயிர்கள் தற்போது கதிர் விடும் நிலையில் உள்ளன. பருவத்திற்கு ஏற்ற மழைப் பொழிவில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், வளர்ந்த பயிர்கள் பாதிப்பில் சிக்கி உள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில வாரங்களில் மானாவாரி பயிர்கள் காய்ந்து மகசூல் பாதிக்கும் நிலை ஏற்படும்.

மூலக்கதை