93 கோடி செலவான கிருதுமால் நதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு:15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசான பரிதாபம்

தினமலர்  தினமலர்

திருப்புவனம்:கிருதுமால் நதியை 93 கோடி ரூபாய் செலவில் துார்வாரியும் 4 வருடங்களில் கருவேல மரங்கள் வளர்ந்து பயனின்றி கிடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சிவகங்கை, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்குவது கிருதுமால் நதி.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் வைகை ஆற்றில் இருந்து பிரிந்து மதுரை நகர் வழியாக கொந்தகை, நாங்கூர், அபிராமம் வழியாக 80 கி.மீ துாரம் பயணம் செய்து கமுதி குண்டாறில் இணைகிறது கிருதுமால் நதி, மதுரைநகரின் கழிவு அனைத்தும் கிருதுமால் நதியில் விடப்பட்டதால் நதி மாசடைந்து பாசனத்திற்கே லாயக்கற்றதாகி விட்டது. இதனையடுத்து 1973ல் மதுரை விரகனுார் மதகு அணையில் இருந்து வெள்ளக்கால்வாய் மூலம் மேலவெள்ளுர் கண்மாய் வழியாக கொந்தகையுடன் இணையும் வகையில் வாய்க்கால் தோண்டப்பட்டது. வைகையில் வெள்ளக்காலங்களில் இந்த புதிய கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை உறுதியளித்தது. அதன்படி கடந்த 2012ல் 17 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கால்வாய் மேடு பள்ளமாக இருந்ததால் தண்ணீர் முழுமையாக சென்று சேரவில்லை. 1995ல் தண்ணீர் விரைவாக செல்ல 3 கோடி ரூபாய் செலவில் மதுரை விரகனுார் மதகு அணையில் இருந்து கொந்தகை வரை 5.5 கி.மீ துாரத்திற்கு சிமென்ட் தொட்டி போன்ற அமைப்பு கட்டப்பட்டது.
அதன் பின் 2015ல் 93 கோடி ரூபாய் செலவில் மதுரை விரகனுாரில் இருந்து அபிராமம் வரை கிருதுமால் நதி துார் வாரப்பட்டது. இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 11 கண்மாய்களும், விருதுநகர் மாவட்டத்தில் 31 கண்மாய்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 கண்மாய்களும் பயன்பெறும் என்றும் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். இந்த கால்வாய் துார் வாரும் போது கடும் வறட்சி மாவட்டமான விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் துார் வாரிய நான்கு வருடங்களில் கால்வாய் முழுவதும் கருவேல மரங்கள், முட்கள், நாணல்கள், வேம்பு, புளியமரங்கள், ஆகாயத்தாமரை செடிகள் என பலவும் வளர்ந்து கால்வாய் முற்றிலும் சேதமடைந்து விட்டது.
தற்போது கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் ஒருகி.மீ துாரம் கூட தணணீர் செல்ல வாய்ப்பில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர். பல இடங்களில் சிமென்ட் தொட்டி சேதமடைந்து கால்வாயை அடைத்துள்ளன. கிருதுமால் நதியின் குறுக்கே கட்டப்பட்ட பல பாலங்களும் இடிந்து விழும் தருவாயில் உள்ளன. இதுவரை கிருதுமால் நதி துார்வாரி ஒருமுறை கூட தண்ணீர் திறக்கப்படவில்லை. உலக வங்கி நிதி உதவியுடன் துார் வாரியதாக சொல்லப்பட்டாலும் பெயரளவிலேயே துார்வாரியுள்ளனர்.
வைகை-கிருதுமால் நதி பாசன சங்க தலைவர் ஆலாத்துார் கோவிந்தன் கூறியதாவது: கிருதுமால் நதியில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறோம். கால்வாயை துார் வார வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை அடுத்து கடந்த 2013ல் 93 கோடி ரூபாய் செலவில் துார் வாரப்பட்டது. ஆனாலும் கிருதுமால் நதியில் பல இடங்களில் கருவேல மரங்கள் வளர்ந்து தண்ணீர் செல்ல வழியின்றி உள்ளது. கிருதுமால் நதியை துார் வார வேண்டும் என மதுரை, சிவகங்கை , விருதுநகர் மாவட்ட கலெக்டர்களிடம் முறையிட்டும் பயனில்லை என்றார். விரகனுார் அணை பொறியாளர் ரமேஷ் கூறுகையில் வாய்க்கால் உள்ளிட்ட இடங்களில் கருவேல மரங்கள் வளர்வது சகஜம் தான், விரைவில் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மூலக்கதை