கடைசி நாளில் பரபரப்பான ஆட்டம் போதிய வெளிச்சம் இல்லாததால் தலை தப்பியது இலங்கை

தினகரன்  தினகரன்

கொல்கத்தா : இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், மிகவும் விறுவிறுப்பாக அமைந்த கடைசி நாள் ஆட்டத்தில் 231 ரன் இலக்கை துரத்திய இலங்கை 75 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 16ம் தேதி தொடங்கி நடந்த இபோட்டியில் முதல் 2 நாள் ஆட்டம் கனமழையால் பாதிக்கப்பட்டது. டாசில் வென்ற இலங்கை முதலில் பந்துவீச, இந்தியா முதல் இன்னிங்சில் 172 ரன்னுக்கு சுருண்டது. இலங்கை முதல் இன்னிங்சில் 292 ரன் குவித்து ஆல் அவுட்டானது.இதைத் தொடர்ந்து, 122 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 4ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்திருந்தது. ராகுல் 73 ரன், புஜாரா 2 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். ராகுல் 79 ரன் (125 பந்து, 8 பவுண்டரி) எடுத்து லக்மல் வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து புஜாராவுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். புஜாரா 22 ரன் எடுத்து லக்மல் வேகத்தில் பெரேரா வசம் பிடிபட்டார்.அடுத்து வந்த ரகானே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், கோஹ்லி உறுதியுடன் விளையாடி அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டார். ஜடேஜா 9, அஷ்வின் 7, சாஹா 5, புவனேஷ்வர் குமார் 8 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லி தனது 18வது சதத்தை நிறைவு செய்ததும், இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 352 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. கோஹ்லி 104 ரன் (119 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்), ஷமி 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பந்துவீச்சில் லக்மல், ஷனகா தலா 3, கமகே, தில்ருவன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 231 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. சமரவிக்ரமா, கருணரத்னே இருவரும் துரத்தலை தொடங்கினர். புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரில் கடைசி பந்தில் சமரவிக்ரமா டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து ஷமி வேகத்தில் கருணரத்னே (1 ரன்) பலியாக, இலங்கை அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.புவனேஷ்வர், ஷமி, உமேஷ் வேகக் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திரிமன்னே 7, மேத்யூஸ் 12, கேப்டன் சண்டிமால் 20, டில்வெல்லா 27 ரன்னில் பெவிலியன் திரும்பினர். தில்ருவன் பெரேரா ரன் ஏதும் எடுக்காமல் புவி வேகத்தில் பலியாக, இலங்கை 75 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது. இந்திய வீரர்கள் வெற்றி முனைப்புடன் தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் டிராவில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். இன்னும் சில ஓவர்கள் வீசும் வாய்ப்பு கிடைத்திருந்தால், இந்திய அணி நிச்சயமாக வெற்றியை வசப்படுத்தியிருக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் டிராவில் முடிய வீரர்களும் ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். ஷனகா 6, ஹெராத் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் புவனேஷ்வர் 11 ஓவரில் 8 மெய்டன் உட்பட 8 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ஷமி 2, உமேஷ் 1 விக்கெட் வீழ்த்தினர். இரு இன்னிங்சிலும் தலா 4 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரண்டாவது டெஸ்ட் நாக்பூரில் வரும் 24ம் தேதி தொடங்குகிறது.

மூலக்கதை