ஏடிபி உலக டூர் பைனல்ஸ திமித்ரோவ் சாம்பியன்

தினகரன்  தினகரன்

லண்டன் : ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில், பல்கேரியா வீரர் கிரிகோர் திமித்ரோவ் சாம்பியன் பட்டம் வென்றார்.சீசன் முடிவு உலக தரவரிசையில் டாப் 8 வீரர்கள் பங்கேற்ற இந்த தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில், பெல்ஜியம் வீரர் டேவிட் காபினுடன் (7வது ரேங்க்) மோதிய திமித்ரோவ் (2வது ரேங்க்) 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் திமித்ரோவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்து புள்ளிகளைக் குவித்த காபின் 6-4 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாக விளையாடிய திமித்ரோவ் 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் இரண்டரை மணி நேரம் போராடி வென்று ஏடிபி உலக டூர் கோப்பையை முத்தமிட்டார். காபின் 2வது இடத்துடன் திருப்தி அடைந்தார். இருவரும் 6 முறை மோதியுள்ளதில் திமித்ரோவ் 5-1 என முன்னிலை வகிக்கிறார். லீக் சுற்றில் 3 மற்றும் அரை இறுதி, பைனல் என தொடர்ச்சியாக 5 வெற்றிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அவர் 1500 தரப்புள்ளிகளை தட்டிச் சென்றார். இரட்டையர் பிரிவு பைனலில் ஹென்றி கோன்டினென் (பின்லாந்து, 2) - ஜான் பீயர்ஸ் (ஆஸி.) ஜோடி 6-4, 6-2 என்ற நேர் செட்களில் லூகாஸ் குபாட் (போலந்து, 1) - மார்செலோ மெலோ (பிரேசில்) ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

மூலக்கதை