ரஞ்சி நாக் அவுட் சுற்று வாய்ப்பை தக்கவைத்தது தமிழகம்

தினகரன்  தினகரன்

இந்தூர் : மத்திய பிரதேச அணியுடன் நடந்த ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக 3 புள்ளிகள் பெற்ற தமிழக அணி, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில், மத்திய பிரதேசம் 264 ரன் மற்றும் தமிழகம் 326 ரன் எடுத்து ஆல் அவுட்டாகின. 62 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய மத்திய பிரதேசம் 3ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 351 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.பட்டிதார் 89, ஷுபம் 56, ஹர்பிரீத் சிங் 100*, டேன் 65* ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து, 290 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழகம் 25 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 79 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது. அபராஜித் 30, கேப்டன் முகுந்த் 32 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக 3 புள்ளிகள் பெற்ற தமிழகம் கால் இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. சி பிரிவில் ஆந்திரா (19), மத்திய பிரதேசம் (15), மும்பை (14), தமிழகம் (11) முதல் 4 இடங்களில் உள்ளன.

மூலக்கதை