புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தென்மாவட்டங்களில் இன்று சில இடங்களில் மழை பெய்யும்

PARIS TAMIL  PARIS TAMIL
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தென்மாவட்டங்களில் இன்று சில இடங்களில் மழை பெய்யும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. தென்மாவட்டங்களில் மழை லேசாகத்தான் பெய்தது. இந்தநிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் சில இடங்களில் ஓரளவுக்கு மழை பெய்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை

இந்த நிலையில் கன்னியாகுமரி முதல் லட்சத்தீவு வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் இன்று மழைபெய்ய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

ஒரு குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது குமரிக்கடல் முதல் லட்சத்தீவு வரை பரவி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும். குறிப்பாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று பகலில் வேப்பேரி, நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழைபெய்தது.

பாபநாசத்தில் 9 செ.மீ. மழை

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

பாபநாசம் (நெல்லை மாவட்டம்) 9 செ.மீ., ஆயிக்குடி, விளாத்திக்குளம், தக்கலை, செங்கோட்டை, தரங்கம்பாடி, தென்காசி, நெய்வேலி தலா 3 செ.மீ., குடவாசல், மயிலாடுதுறை, கும்பகோணம், வேலூர் தலா 2 செ.மீ., சிவகிரி, வானூர், திருமயம், மணமேல்குடி, போடிநாயக்கனூர், சீர்காழி, திருவையாறு, திருத்துறைப்பூண்டி, கமுதி, பண்ருட்டி, சங்கரன்கோவில், பேச்சிப்பாறை, பேராவூரணி, கலவை, தொண்டி, மதுக்கூர், கடலாடி, அரியலூர், மணிமுத்தாறு தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
 

மூலக்கதை