தமிழகத்தில் கால் அல்ல, கையைக் கூட பா.ஜ.க.வால் ஊன்ற முடியாது மு.க.ஸ்டாலின் பேச்சு

PARIS TAMIL  PARIS TAMIL
தமிழகத்தில் கால் அல்ல, கையைக் கூட பா.ஜ.க.வால் ஊன்ற முடியாது மு.க.ஸ்டாலின் பேச்சு

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு இல்ல திருமண விழாவை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திட்டுகிறார்கள்

தமிழகத்தில் இருக்கும் குதிரைபேர ஆட்சியை கூட யாரும் அதிகமாக திட்டவில்லை. எங்களைத்தான் இப்போது அதிகமாக திட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்ன திட்டுகிறார்கள் என்றால், இந்த ஆட்சியை இன்னும் ஒழிக்காமல் இருக்கிறீர்களே என்கிறார்கள். நாடு அப்படி ஒரு நிலையில் இருக்கின்றது.

நாட்டினுடைய நிலைமைகளை சிந்தித்து பார்க்க வேண்டும். இன்று ஏதாவது இந்த நாட்டில் செயல்படக்கூடிய நிலையில் இருக்கிறதா? நம்முடைய உரிமைகள் எல்லாம் இன்றைக்கு பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை. மத்தியில் இருக்கும் ஆட்சி திட்டமிட்டு, மதத்தின் அடிப்படையில் நடைபெறும் ஒரு ஆட்சியாக, மதவெறி பிடித்திருக்கும் ஒரு ஆட்சியாக, தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய அந்த உரிமைகளை கூட பெற முடியாத நிலையில் இன்றைக்கு நாம் இருந்துகொண்டு இருக்கிறோம்.

வருமான வரித்துறை சோதனை

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் திடீரென்று நிறுத்தப்படுகிறது. ஏன் நிறுத்தப்பட்டது?. 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணம் யாருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்தில் இருந்து கைப்பற்றப்படுகிறது. அந்த 89 கோடி ரூபாய் எப்படி பிரிக்கப்பட்டு, யார் யாருக்கு வழங்கப்பட்டிருந்தது?

முதல் பெயரே, இப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அடுத்து செல்லூர் ராஜூ அடுத்து செங்கோட்டையன் என அடுத்தடுத்து எட்டு, ஒன்பது அமைச்சர்கள் பெயர் உள்ளது. இவ்வாறு வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது என்று ஆவணங்கள் ஆதாரத்தோடு எடுக்கப்பட்டது.

இடைத்தேர்தலை நிறுத்தியது டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன். அப்போது என்ன காரணத்துக்காக தேர்தலை நிறுத்துகிறோம் என்று 18 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிடுகிறது. அதில், 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா விவகாரத்தில் இவர்கள் மேலெல்லாம் எப்.ஐ.ஆர். பதிவு செய்து வழக்குத் தொடுத்து விசாரணை நடத்த வேண்டும், அதுவரையில் தேர்தல் நடத்தக் கூடாது என வெளிப்படையாக அறிவித்தார்கள். இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா?

நத்தம் விஸ்வநாதன் வீட்டில் சோதனை நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் சோதனை நடந்தது. இப்படி எல்லோர் வீட்டிலும் சோதனை நடந்திருக்கிறது. அந்த சோதனைகளின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று இதுவரை செய்தி இருக்கிறதா?

மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்

அதனை அடிப்படையாக வைத்து மாநில ஆட்சியை மிரட்டி, அச்சுறுத்தி எப்படியாவது தமிழகத்தில் காலூன்றுவதற்கான முயற்சியில் மத்திய பா.ஜ.க. ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. நான் உறுதியோடு சொல்கிறேன், எந்த காரணத்தைக் கொண்டும் அவர்கள் கால் அல்ல கையை ஊன்றுவதற்கு கூட தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

எது எப்படியிருந்தாலும், மத்தியில் மதச்சார்பற்ற ஒரு ஆட்சி அமைவதற்கு அடிப்படையாக மாநிலத்தில் ஊழலற்ற அரசு அமைய வேண்டும். தி.மு.க.வை பொறுத்தவரையில், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி சிந்திக்கின்ற, நாட்டை பற்றி எண்ணுகின்ற இயக்கம் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட தி.மு.க.வுக்கு வரக்கூடிய காலக்கட்டங்களில் நீங்களெல்லாம் நல் ஆதரவை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை