'நோ பார்க்கிங்'கில் வாகனமா: படம் பிடித்து அனுப்பினால் பரிசு

தினமலர்  தினமலர்
நோ பார்க்கிங்கில் வாகனமா: படம் பிடித்து அனுப்பினால் பரிசு

புதுடில்லி: ''அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தப்படும் கார் உள்ளிட்ட வாகனங்களை படம் பிடித்து அனுப்புவோருக்கு, பரிசு வழங்கப்படும்,'' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, டில்லியில் நேற்று, அமைச்சர், நிதின் கட்கரி கூறியதாவது: என் அமைச்சக அலுவலகத்துக்கு வெளியே, வாகனங்கள் நிறுத்தும் இடம் இல்லாதது, அவமானமாக உள்ளது. என்னை சந்திக்க வரும் வெளிநாட்டு துாதர்கள், பெரிய மனிதர்கள், தங்கள் வாகனங்களை, பார்லிமென்டுக்கு வெளியே, சாலையை மறித்தபடி நிறுத்தும் சூழ்நிலை உள்ளது.

மோட்டார் வாகன சட்ட விதிகளில், புதிய ஷரத்தை சேர்க்க உள்ளேன். அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை, மக்கள், தங்கள் மொபைல் போனில் புகைப்படம் எடுத்து, சம்பந்தப்பட்ட துறையினருக்கோ, போலீசுக்கோ அனுப்பி வைக்கலாம். அவ்வாறு நிறுத்துவோரிடம், 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.அதில், 10 சதவீத தொகை, புகைப்படம் எடுத்து அனுப்புவோருக்கு, பரிசாக வழங்கப்படும்.
பெரிய நிறுவனங்கள், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். பார்லிமென்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதியை ஏற்படுத்த, 13 துறைகளின் அனுமதியை பெற வேண்டிய நிலை உள்ளது; இந்நிலை மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை