இந்தியா மீது பாக்., பழி : நிராகரித்தது சீன அரசு

தினமலர்  தினமலர்
இந்தியா மீது பாக்., பழி : நிராகரித்தது சீன அரசு

பீஜிங்: சீனா - பாக்., இடையிலான, பொருளாதார மண்டலம் அமைவதை சீர்குலைக்க, இந்தியா, 3,250 கோடி ரூபாய் செலவில், சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்திருப்பதாக, பாக்., ராணுவ உயரதிகாரி கூறியுள்ள குற்றச்சாட்டை, சீனா நேற்று, நிராகரித்தது.
அண்டை நாடான, பாக்., - சீனா இடையே, சி.பி.இ.சி., எனப்படும், சீனா - பாக்., பொருளாதார மண்டலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில், மத்திய அரசு, 3,250 கோடி ரூபாய் செலவில், சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்துள்ளதாக, பாக்., ராணுவ கமிட்டியின் தலைவர், ஜெனரல் ஸுபேர் மெஹ்மூத் ஹயாத், குற்றஞ்சாட்டினார்.
பாக்.,கில் உள்ள பலுாசிஸ்தான் மாகாணத்தில், பயங்கரவாதத்தை, இந்தியா துாண்டி வருவதாகவும், அவர் கூறினார்.
இந்நிலையில், ஹயாத்தின் குற்றச்சாட்டை, சீன அரசு நேற்று உறுதியாக மறுத்தது.
சீனத் தலைநகர், பீஜிங்கில் நேற்று, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், லு காங்., நிருபர்களிடம் கூறுகையில், 'பாக்., ராணுவ உயரதிகாரி கூறுவது போல், நம்பத்தக்க தகவல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை' என்றார்.

மூலக்கதை