போதிய வெளிச்சமின்மையால் தோல்வியிலிருந்து தப்பிய இலங்கை: முதல் டெஸ்ட் போட்டி டிரா

தினகரன்  தினகரன்

கொல்கத்தா: இந்தியா-இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.  2-வது இன்னிங்சில் இலங்கை 7 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்த நிலையில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் டிராவில் முடிந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில் டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசிய நிலையில், இந்தியா முதல் இன்னிங்சில் 172 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. புஜாரா அதிகபட்சமாக 52 ரன் எடுத்தார். இலங்கை பந்துவீச்சில் லக்மல் 4, கமகே, ஷனகா, பெரேரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். முதல் 2 நாள் ஆட்டமும் கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 294 ரன் குவித்து ஆல் அவுட்டானது (83.4 ஓவர்). அதிகபட்சமாக ஹெராத் 67 ரன் எடுத்தார். இந்திய பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி தலா 4, உமேஷ் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினர். அனைத்து விக்கெட்டையும் வேகப் பந்துவீச்சாளர்களே கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 122 ரன் பின்தங்கிய நிலையில் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. லோகேஷ் ராகுல் - ஷிகர் தவான் ஜோடி பொறுப்புடன் விளையாடி முதல் விக்கெட்டுக்கு 166 ரன் சேர்த்தது. இருவரும் அரை சதம் விளாசினர். இந்திய அணி  2வது இன்னிங்சில் 8 விக்கெட் இழந்து 352 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இந்திய அணி கேப்டன் கோஹ்லி அபாரமாக விளையாடி சதம் விளாசினார். 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை வீரர்கள் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 26 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

மூலக்கதை