பத்மாவதி படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
பத்மாவதி படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு

 ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் தயாராகி உள்ள பத்மாவதி திரைப்படத்தை அடுத்த மாதம் 1-ந் தேதி திரைக்கு கொண்டுவர முடிவு செய்து அதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு இருந்தனர். இந்த படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்று பா.ஜனதா, ராஜபுத்ர சேனா, கர்னி சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 
டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் இருந்து மானத்தை காப்பாற்ற 12 ஆயிரம் பெண்களுடன் தீயில் இறங்கி உயிர் நீத்தவர் ராணி பத்மினி. ஆனால் பத்மாவதி படத்தில் அலாவுதீன் கில்ஜியை, ராணி பத்மினி காதலிப்பதுபோல் தவறாக காட்சிப்படுத்தி உள்ளனர் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
 
இப்படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும், அவரது தலையையோ அல்லது படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இதையடுத்து தீபிகா படுகோனேவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவரது வீட்டிலும் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
 
 
 
இதனிடையே பத்மாவதி படத்தை திரையிட ராஜஸ்தான், உத்தரபிரதேச அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இது குறித்து ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு எழுதிய கடிதத்தில் “பத்மாவதி படத்தை வெளியிடுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே தேவையான திருத்தங்கள் செய்வதுவரை பத்மாவதி படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்று கூறியுள்ளார். இதேபோல் உத்தரபிரதேச அரசும் பத்மாவதி படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
 
அதே சமயம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமும், பத்மாவதி படக்குழுவினருக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து அந்த வாரியத்தின் தலைவர் பிரசூன் ஜோஷி நேற்று முன்தினம் கூறுகையில், பத்மாவதி படத்தை தணிக்கைக்காக அனுப்பிய விண்ணப்பத்தில் குறைகள் இருப்பதாக கூறி அதை திருப்பி அனுப்பி இருந்தோம். ஆனால் பட தயாரிப்பு குழுவினர் தங்கள் படத்துக்கு தணிக்கை கிடைப்பதற்கு முன்பே படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவோம் என ஊடகங்களில் பேட்டி அளிக்கின்றனர். இது கண்டனத்துக்கு உரியது என்றார்.
 
 
 
இந்த சூழ்நிலையில் பத்மாவதி படத்தின் தயாரிப்பு நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
எங்களுக்கும் சமூக பொறுப்பு உள்ளது. இந்திய குடிமகன் என்ற வகையில் சட்டத்தை மதிக்கிறோம். திரைப்பட சான்றிதழ் வாரியம் உள்பட சட்டரீதியான அமைப்பின் முடிவை ஏற்றுக்கொள்கிறோம். பத்மாவதி படத்தில் ராஜபுத்திரர்களின் வீரம், பாரம்பரியம், கண்ணியம் ஆகியவற்றை எந்த வகையிலும் நாங்கள் இழிவுபடுத்தவில்லை.
 
எனினும் இந்த படத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே பத்மாவதி திரைப்படம் வெளியிடும் தேதியை ஒத்திவைக்கிறோம். இந்த முடிவை நாங்களாகவே முன்வந்து எடுத்து உள்ளோம்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
 

மூலக்கதை