துபாயில் அரங்கேறிய நடிகை ஹேமமாலினி நூல் அறிமுக நிகழ்ச்சி..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
துபாயில் அரங்கேறிய நடிகை ஹேமமாலினி நூல் அறிமுக நிகழ்ச்சி..

துபாயில் நடிகை ஹேமமாலினியின் டிரீம் கேர்ள்(Dream Girl) என்ற ஆங்கில நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்திய துணை தூதர் விபுல் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் இங்கு நடைபெறும் நிகழ்ச்சிக்கு நடிகை ஹேமமாலினி வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவர் மதுரா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியானது இந்தியாவின் 70-வது ஆண்டு சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது என்றார்.

அதனைத் தொடர்ந்து நடிகை ஹேமமாலினி தனது டிரீம் கேர்ள்  என்ற நூலை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அவர்களது விருப்பம் போல் படிக்க வைக்க வேண்டும். தங்களது விருப்பத்துக்கு ஏற்ப பிள்ளைகளை படிக்க வைக்க கட்டாயமாக்க கூடாது.

மேலும் மதுரா தொகுதியில் பொதுமக்களுக்காக கழிவறைகளை கட்டியுள்ளேன். சில நாட்கள் கழித்து அவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்தேன். அந்த கழிவறைகள் பயன்படுத்தப்படாமல் பொருட்கள் வைக்கும் அறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து அதிர்ச்சி அடைந்தேன்.

இது குறித்து அந்த பகுதி மக்களிடம் விசாரித்த போது கழிவறைகளை பயன்படுத்தி காலைக் கடன்களை செய்ய மிகவும் சிரமமாக இருக்கிறது. இயற்கையாக காலைக் கடன்களை செலுத்தி பழக்கப்பட்ட எங்களுக்கு, இதனால் காலைக் கடனை செலுத்த கழிவறைகளில் முடியவில்லை என தெரிவித்தனர்.

இது கேட்டு அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இத்தகவலை பொதுமக்களிடம் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பாரதி காவலர் ராமமூர்த்தி, வர்த்தக பிரமுகர் சையது அபுதாஹிர், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஷார்ஜாவில் நடந்த 36-வது சர்வதேச புத்தக கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக வந்த நடிகை ஹேமமாலினி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மூலக்கதை