மத்திய அரசின் அனுமதி கிடைக்க எதிர்பார்ப்பு! 10 ஆயிரம் தொழிலாளருக்கு பயிற்சி

தினமலர்  தினமலர்
மத்திய அரசின் அனுமதி கிடைக்க எதிர்பார்ப்பு! 10 ஆயிரம் தொழிலாளருக்கு பயிற்சி

திருப்பூர்;நிட்டிங், டையிங் நிறுவனங்களின் பணிபுரியும் தொழிலாளர்கள், 10 ஆயிரம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்து தொழில் துறையினர், காத்திருக்கின்றனர்.
உள்நாடு, ஏற்றுமதி ஆடை வர்த்தக மதிப்பை உயர்த்துவதற்காக, திருப்பூர் பின்னலாடை துறையினர், ஏராளமான யுத்திகளை கையாண்டு வருகின்றனர். உற்பத்தி பெருக்கம், தரம், மூலப்பொருட்கள் வீணாவதை தடுப்பதற்காக, தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு துறை
களுடன், ஒப்பந்தம் மேற்கொண்டு, நிப்ட்-டீ கல்லூரி, திறன் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக, ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு திட்டத்தில், புதிய தொழிலாளர்களுக்கு, ஆடை தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்காக, திருப்பூர் உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், 210 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டு முதல், தற்போது வரை, மூன்று கட்டங்களாக, 15 ஆயிரம் பேருக்கு, தையல், செக்கிங் உள்ளிட்ட ஆடை தயாரிப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில், 45 நாட்கள் பயிற்சி அளித்து, தேர்வு நடத்தி, தொழிலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அடுத்த கட்டமாக, நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்த தொழில் துறையினர் முனைப்பு காட்டிவருகின்றனர்.இதற்காக, தேசிய திறன் மேம்பாட்டு கழக உதவியை நாடியுள்ளது, நிப்ட்-டீ கல்லூரி. முதல்கட்டமாக, நிட்டிங், டையிங் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பத்தாயிரம் பேரை தேர்வுசெய்து, அவர்களின் திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
நிப்ட்-டீ கல்லூரி திறன் மேம்பாட்டு துறை தலைவர் சிவஞானம் கூறியதாவது:திறன் மேம்பாட்டு அதிகாரிகள் நிப்ட்-டீ கல்லூரியில் ஆய்வு நடத்தி சென்றுள்ளனர். விரைவில் அனுமதி கிடைத்துவிடும்; உடனடியாக, பயிற்சி மையங்கள் துவக்கி, தொழிலாளர்களை தேர்வுசெய்து, பயிற்சி அளிக்கப்படும். அதுபோல், வரும் டிச., முதல், கிராமப்புற இளைஞர் மேம்பாட்டு திட்டத்திலும், பயிற்சிகள் துவங்குகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை