அடையாற்று நீரை, செம்பரம்பாக்கம் ஏரிக்கு திருப்ப... புது முயற்சி! வறட்சி வரும் ஆண்டுகளில் பயன்படுத்த யோசனை

தினமலர்  தினமலர்
அடையாற்று நீரை, செம்பரம்பாக்கம் ஏரிக்கு திருப்ப... புது முயற்சி! வறட்சி வரும் ஆண்டுகளில் பயன்படுத்த யோசனை

மழைக்காலங்களில், அடையாறு ஆற்றில் வெளியேறும் உபரிநீரை, குழாய் பதித்து, செம்பரம்பாக்கம் ஏரி, சிக்கராயபுரம் கல் குவாரிகளில் சேமித்து வைக்க, பொதுப்பணித்துறை புதிய திட்டம் வகுத்துள்ளது. இதன் மூலம், வறட்சி வரும் ஆண்டுகளில், இந்த நீரை, சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.தாம்பரத்தை அடுத்த ஆதனுாரில் துவங்கி, பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது அடையாறு ஆறு. மொத்தம், 42 கி.மீ., துாரத்திற்கு பயணிக்கும் இந்த ஆறு, தென்சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து மழைநீர் வடிந்து செல்வதற்கான ஆதாரமாக விளங்குகிறது.
அரசு உத்தரவுஅடையாறு ஆற்றில், திருநீர்மலையில் இருந்து தான் நீரோட்டம் காணப்படும். தோல் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதும், சட்டவிரோதமாக, உள்ளாட்சி கால்வாய்கள், ஆற்றுடன் இணைக்கப்பட்டிருப்பதும் தான் இதற்கு காரணம்.திருநீர்மலையில் இருந்து ஆதனுார் வரை, கோடையில், ஆறு வறண்டு கிடக்கும். இந்த பகுதிகள் இதுவரை மாசடையவில்லை.இதனால், ஆதனுாரில் இருந்து திருநீர்மலைக்குள், தடுப்பணை கட்டி, அடையாற்றில் மழைநீரை சேமிக்க திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கு மதிப்பீடு தயாரிக்க, பொதுப்பணித்துறைக்கு, அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.இந்நிலையில், அடையாற்றில், வீணாக வெளியேறும் உபரிநீரை, செம்பரம்பாக்கம் ஏரிக்கும், சிக்கராயபுரம் கல்குவாரிக்கும் கொண்டு சென்று சேமிக்க முடியுமா என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசித்து உள்ளனர்.
சமாளிக்க முடியும்இதில், செம்பரம்பாக்கம் ஏரி, சிக்கராயபுரம் கல் குவாரியில் இருந்து தாழ்வான பகுதியில், அடையாறு ஆறு இருப்பதால், இயற்கையாக, கால்வாய் வழியாக, நீரை கொண்டு செல்வது சாத்தியமாகாது.ஆனால், குழாய் அமைத்து, இயந்திரங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து, 'பம்பிங்' செய்வதன் மூலம், உபரிநீரை, ஏரிக்கும், கல் குவாரிக்கும் கொண்டு சென்று சேமிக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமாளிக்க முடியும்இதன் மூலம், பருவ மழை குறைவாக கிடைக்கும் ஆண்டுகளில், அடையாற்றில் வீணாக ஓடி, கடலில் கலக்கும் நீரை, ஏரியிலும், கல்குவாரியிலும் சேமித்து, சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியும்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2015ம் ஆண்டு, பருவமழையின் போது, பெரு வெள்ளம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாமல், வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது.மழை ஏமாற்றினால், குடிநீர் ஏரிகளில், 50 சதவீதம் கூட நீர் இருப்பு இருக்காது. அதுபோன்ற வறட்சி ஆண்டுகளில், அடையாற்றில் இருந்து வரும் நீரை சேமிப்பதன் மூலம், ஓரளவு தேவையை சமாளிக்க முடியும்.உதாரணமாக, இந்த ஆண்டு இதுவரை செம்பரம்பாக்கம் ஏரி, 1.5 டி.எம்.சி., அளவு கூட நிரம்பவில்லை. இதற்கு மேல் மழை பெய்தால் மட்டுமே ஏரி நிரம்பும்.
அறிக்கை அளிப்பு:சிக்கராயபுரம் கல்குவாரி நீரும், முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளதால், நீர் இருப்பு குறைவாக உள்ளது.ஆனால், இந்த ஆண்டு, அடையாறு ஆற்றில், இதுவரை வீணாக கடலில் கலந்துள்ள நீர் மட்டும், 5 டி.எம்.சி., இருக்கும். இந்த நீரை, 'பம்பிங்' செய்து, ஏரியிலும், கல்குவாரியிலும் சேமித்திருந்தால், இனி மழை பெய்யுமோ, பெய்யாதோ என்று அச்சம் கொள்ள தேவையில்லை.இதற்காக தான், ஆற்றின் மேல்பகுதியில் இருந்தாலும், அந்த நீர்நிலைகளுக்கு, இந்த உபரிநீரை கொண்டு செல்வது சாத்தியமா என ஆய்வு செய்து வருகிறோம். இதற்கான திட்ட செலவு குறித்து, நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
எந்தெந்த வழித்தடங்களில்?படப்பை அருகே உள்ள ஒரத்துார் ஓடை, சோமங்கலம் கால்வாய் ஆகியவற்றின் வழியாக குழாய் கொண்டு வரப்பட்டு, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக, குழாய் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்லப்படும். இதனுடன், அடையாற்றில் வரதராஜபுரம் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் குழாயும் இணைக்கப்படும். அடுத்ததாக, அடையாற்றில், திருநீர்மலையில் இருந்து ஒரு குழாய் கொண்டு செல்லப்பட்டு, நேரடியாக சிக்கராயபுரம் குவாரியில் இணைக்கப்படும். இந்த புதிய திட்டத்திற்கான, சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடக்கிறது.

நான்கு கதவணைகள்!அடையாற்றில், போதிய நிலப்பரப்பு இல்லாததால், இனி தடுப்பணை கட்டுவது கஷ்டம். அதே நேரத்தில், கதவணை கட்டலாம். கதவணை என்பது, 'ஆற்றுக்குள் நீர்த்தேக்கம்' என்ற அடிப்படையில் அமையும். சோமங்கலம், ஒரத்துார் கிளை ஆறுகளிலும், அடையாற்றில் வரதராஜபுரம், திருநீர்மலை பகுதிகளிலும் கதவணை அமைக்க, திட்டமிடப்பட்டுள்ளது. கதவணை கட்டினால், ஆற்றில், அதிக அளவு தண்ணீர் ஓடும்போது, தடையின்றி செல்ல அதை துாக்கி விடலாம். சராசரியாக தண்ணீர் ஓடும் போது, அதை குழாய்கள் மூலம், செம்பரம்பாக்கம் ஏரி, சிக்கராயபுரம் கல் குவாரிக்கு திருப்பி, சேமிக்கவும் முடியும்.

மூலக்கதை