ஜெகதீசன் 101, யோ மகேஷ் 103* முன்னிலை பெற்றது தமிழகம்

தினகரன்  தினகரன்

இந்தூர் : மத்திய பிரதேச அணியுடன் நடந்து வரும் ரஞ்சி கோப்பை சி பிரிவு லீக் ஆட்டத்தில், ஜெகதீசன் மற்றும் யோ மகேஷின் அபார சதத்தால் தமிழகம் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில், டாசில் வென்ற தமிழகம் முதலில் பந்துவீசியது. மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சில் 264 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தமிழக பந்துவீச்சில் கே.விக்னேஷ் 4, முகமது 3, சுந்தர் 2, சாய் கிஷோர் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தமிழகம் 76 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், தொடக்க வீரர் ஜெகதீசன், 8வது வீரர் யோ மகேஷ் ஜோடி 7வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடியது. 2ம் நாள் ஆட்ட முடிவில் தமிழகம் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்திருந்தது. ஜெகதீசன் 94 ரன், யோ மகேஷ் 44 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். ஜெகதீசன் 101 ரன் எடுத்து (150 பந்து, 13 பவுண்டரி) ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். அடுத்து வந்த முகமது 43 ரன், சாய் கிஷோர் 14, கே.விக்னேஷ் 4 ரன்னில் ஆட்டமிழந்தனர். தமிழகம் முதல் இன்னிங்சில் 326 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (105.4 ஓவர்).யோ மகேஷ் 103 ரன் (214 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இதைத் தொடர்ந்து, 62 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ம.பி. அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்துள்ளது. வஸ்தவா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். ரஜத் பட்டிதார் 81 ரன், ஷுபம் ஷர்மா 41 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. டெல்லி இன்னிங்ஸ் வெற்றி: பாலம் ஏ ஸ்டேடியத்தில் மகாராஷ்டிர அணியுடன் நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் டெல்லி அணி இன்னிங்ஸ் மற்றும் 61 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. டெல்லி 419; மகாராஷ்டிரா 99 & 259 (ராகுல் திரிபாதி 106). ஆந்திரா 215: மும்பை அணியுடன் ஓங்கோலில் நடந்து வரும் போட்டியில், ஆந்திரா முதல் இன்னிங்சில் 215 ரன்னுக்கு சுருண்டது. ஷர்துல் தாகூர் 5, குல்கர்னி 3, அபிஷேக் 1 விக்கெட் வீழ்த்தினர். 117 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை, 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்துள்ளது.

மூலக்கதை