கிராமங்களில் இல்லை; மருத்துவ சேவை!காட்சிப்பொருளான துணை சுகாதார நிலையங்கள் :காலி பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே தீர்வு

தினமலர்  தினமலர்

ஆனைமலை;ஆனைமலை ஒன்றிய பகுதிகளிலுள்ள, 40 சதவீத துணை சுகாதார நிலையங்கள் பூட்டிக்கிடப்பதால், கிராமங்களில் பொதுமக்கள்மருத்துவ வசதிகளை பெறமுடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும், சில துணை சுகாதார நிலையங்கள் முறையான பராமரிப்பின்றி உள்ளதால்,கட்டடங்கள் பாழடைந்து வருகின்றன.
ஆனைமலை ஒன்றியத்தில், 19 ஊராட்சிகளில், 68 குக்கிராமங்கள் உள்ளன. பொதுமக்கள் மருத்துவ வசதிக்காக, வளந்தாயமரம், ஆனைமலை, காளியாபுரம், சேத்துமடை, டாப்சிலிப், பெத்தநாயக்கனுார் மற்றும் ஆழியாறு உள்ளிட்ட, ஏழு இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் எளிதாக மருத்துவ வசதிகள் பெற, பில்சின்னாம்பாளையம், ஜல்லிபட்டி, சோமந்துறை, ஆத்துப்பொள்ளாச்சி உள்ளிட்ட ஊராட்சிகள் சேர்த்து மொத்தம், 32 துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், பொதுமக்களுக்கு காய்ச்சல், மகப்பேறு, சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. துணை சுகாதார நிலையங்களில் டெங்கு, வைரஸ் உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு, தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுகிறது. மேலும், மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுவதுடன், பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.பணியிடம் காலிஇந்நிலையில், 32 செவிலியர்களுக்கு பதிலாக தற்போது, 20 செவிலியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். சோமந்துறைசித்துார், ரமணமுதலிபுதுார் உள்ளிட்ட, 12 இடங்களில் செவிலியர் பணியிடம், ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.
இதனால், பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாமல் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது.மருத்துவ வசதிகளைப் பெற, தனியார் மருத்துவமனைகளையே மக்கள் நாடிச் செல்லும் நிலை உள்ளது.பெண்களுக்கு மகப்பேறுக்கு பின் கவனிப்பு பரிசோதனைகளை முறையதாக பெற முடியாமல் சிரமப்படுவதுடன்,பொள்ளாச்சி அரசுமருத்துவமனைக்குசெல்கின்றனர்.
சமீப காலமாக டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், துணை சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைக்காக அதிகளவில் மக்கள்வருகின்றனர்.ஆனால், துணைசுகாதார நிலையங்கள்பூட்டிக் கிடப்பதால், அனைவரும் அதிருப்தியடைந்துதிரும்பிச் செல்கின்றனர்.
பணிச்சுமை
ஒரு துணை சுகாதார நிலையத்துக்கு, ஒரு செவிலியர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், செவிலியர் பணியிடம் காலியாக உள்ளதால், ஒரு துணை சுகாதார நிலையத்தில் பணியாற்றுபவரே, அருகிலுள்ள துணை சுகாதார நிலையத்தையும் சேர்த்து கூடுதலாக கவனிக்கிறார்.இரண்டு நிலையங்களில், ஒருவரே மாறி மாறி பணியாற்றுவதால், பணிச்சுமை அதிகரிப்பதுடன், மக்களுக்கும் முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதில்லை. ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் பணியாற்ற முடியாமல் நடைமுறைச் சிக்கலும் ஏற்படுகிறது. இதனால், சில துணை சுகாதர நிலையங்களில் செவிலியர் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் மருத்துவ வசதிகளைப் பெறுவதில் பாதிப்பு ஏற்படுகிறது.
வீணாகும் கட்டமைப்பு
செவிலியர் பணியிடம் நிரப்பாததால், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, துணை சுகாதார நிலையங்கள் செயல்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளன. துணை சுகாதார நிலையங்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் புதர் சூழ்ந்து, சட்ட விரோத செயல்கள் அரங்கேறும் திறந்தவெளி 'பார்' ஆக மாறி வருகிறது. கம்பாலபட்டி, சோமந்துறைசித்துார், கரியாஞ்செட்டிபாளையம் உள்ளிட்ட பல இடங்களில், பராமரிப்பு இல்லாமல் துணை சுகாதார நிலைய கட்டமைப்புகள் சிதிலமடைந்துள்ளன. இதுகுறித்து, பொதுமக்கள் பல முறை புகார் கொடுத்தும் காலியாக பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
நடந்தால் நல்லாயிருக்கும்!
ஆனைமலை வட்டார மருத்துவ அலுவலர் சதீஷ் கூறுகையில், ''டிசம்பர், 1ம் தேதி முதல், அனைத்து துணை சுகாதார நிலையங்களிலும் காலியாக உள்ள செவிலியர் பணியிடம்நிரப்பப்படும்.''மேலும், செவிலியர் இல்லாமல், பராமரிப்பின்றி உருக்குலைந்துள்ள துணை சுகாதார நிலைய கட்டடங்கள் சுத்தம் செய்யப்படும். அங்கு, மருந்துகள் இருப்பு வைத்து, மக்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

மூலக்கதை