பணமதிப்பிழப்பால் பொருளாதார மந்தநிலை ஓராண்டுக்கு நீடிக்கும்: மன்மோகன் சிங் கணிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பணமதிப்பிழப்பால் பொருளாதார மந்தநிலை ஓராண்டுக்கு நீடிக்கும்: மன்மோகன் சிங் கணிப்பு

புதுடெல்லி: பணமதிப்பிழப்பு காரணமாக இன்னும் ஓராண்டு காலத்துக்கு பொருளாதாரத்தில் மந்தநிலை நீடிக்கும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ரூ. 1000, ரூ. 500 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டு ஓராண்டு நிறைவுபெற்றுள்ளது.

கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும், கள்ளநோட்டுகளை ஒழிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இதனால் நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என பாஜ தெரிவித்தது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர் என்றும், சிறு மற்றும் குறு தொழில்கள் நசிவடைந்ததாகவும், பொருளாதார வளர்ச்சி தடைபடும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிக்கட்சிகள் குற்றம்சாட்டின.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் ஏற்கனவே கடுமையாக விமர்சித்திருந்தார்.        

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மன்மோகன் சிங், பணமதிப்பிழப்பின் தாக்கம் குறித்து பேசினார். ‘‘பணமதிப்பிழப்பு காரணமாக சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையால் கருப்பு பணம் எதுவும் வெளிவரவில்லை. பொருளாதார வளர்ச்சி விரைவில் சகஜநிலைக்கு திரும்பும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இன்னும் ஓராண்டு காலத்துக்கு பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தநிலை தொடர வாய்ப்புள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்’’ என மன்மோகன் சிங் கூறினார்.



.

மூலக்கதை