இரட்டை இலை சின்னம் விவகாரம் தேர்தல் ஆணையம் 22ம் தேதி தீர்ப்பு? : அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இரட்டை இலை சின்னம் விவகாரம் தேர்தல் ஆணையம் 22ம் தேதி தீர்ப்பு? : அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு

சென்னை: இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு நவம்பர் 22ம் தேதி வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது,  அதிமுகவினர் மத்தியில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வந்தது.

இதையடுத்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிமுக கட்சி பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகிய இரண்டையும் முடக்கி உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, சசிகலா மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இரு அணிகளும் கட்சி, சின்னம் ஆகியவற்றை தங்களுக்கே ஒதுக்கி தரவேண்டும் என லட்சக்கணக்கான உறுப்பினர்கள் கையெழுத்து அடங்கிய பிரமாண பத்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தன.

  இதற்கிடையே மதுரை உயர் நீதிமன்றத்தின் ஆணை மற்றும் நவம்பர் 10ம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி முடிவை வெளியிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான இறுதிகட்ட விசாரணையை நடத்த சசிகலா, தினகரன், ஓ. பன்னீர்செல்வம், மதுசூதனன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

தொடர்ந்து, சின்னம் தொடர்பாக இரு அணிகளிடமும் தலைமை தேர்தல் ஆணையர் அக்சல் குமார் ஜோதி தலைமையில் கடந்த மாதம் 6, 16, 23, 30, நவம்பர் 1, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த நவம்பர் 8ம் தேதியன்று ஒத்திவைத்தது.

 இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பை வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கொடுத்த காலக்கெடு கடந்த 10ம் தேதியுடன் முடிந்து விட்டது.

எனவே, அதிமுகவின் இரண்டு அணிகளிடமும் சின்னம் தொடர்பாக நடத்திய விசாரணை குறித்த விவரங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் குறித்து அதிமுகவை சேர்ந்த இரண்டு அணிகள் தாக்கல் செய்த ஆவணங்கள் மற்றும் விசாரணை தகவல்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அந்த ஆய்வுகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக நவம்பர் 22ம் தேதி தேர்தல் ஆணையம் தீர்ப்பு அளிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவில் அதிகப்படியான எம்எல்ஏக்கள், எம்பிக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ, அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தீர்ப்பு தேதிக்காக கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் காத்திருக்கின்றனர்.

 

1 ஆண்டாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ள நிலையில், சின்னம் யாருக்கு கிடைக்கும் என்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் இந்த தீர்ப்பு பெரிதும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தீர்ப்பை பொறுத்தே தமிழக அரசியல் களத்தில் மாற்றம் நிகழ வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

.

மூலக்கதை