ஜெயலலிதா அறையை சோதனையிட நாங்கள் அனுமதிக்கவில்லை இளவரசியின் மகன் விவேக் பேட்டி

PARIS TAMIL  PARIS TAMIL
ஜெயலலிதா அறையை சோதனையிட நாங்கள் அனுமதிக்கவில்லை இளவரசியின் மகன் விவேக் பேட்டி

வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு, இளவரசியின் மகனும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக்கின் தங்கை ‌ஷகிலா, ஜெயலலிதாவிடம் முன்பு உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோரை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கு சோதனையும் நடத்தப்பட்டது.

தனது தங்கை ‌ஷகிலாவை வருமான வரித்துறை அதிகாரிகள் போயஸ் கார்டன் இல்லத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதை அறிந்ததும் விவேக், உடனடியாக காரில் அங்கு விரைந்து சென்றார்.

அவர் அங்கு போய்ச் சேர்ந்ததும், காரில் இருந்து இறங்கி நடந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து அவர் வேதா இல்லத்துக்குள் நடந்து சென்றார். நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே வந்த விவேக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

எனது சகோதரி ‌ஷகிலா தனக்கு வந்த ‘சம்மன்’ அடிப்படையில் மாலை 4.30 மணிக்கு வருமான வரித்துறை அலுவலகத்துக்கு சென்றார். வருமான வரி இலாகா அதிகாரிகள் அவரை அழைத்துக்கொண்டு அப்படியே போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்து ‘வாரண்ட்’ வைத்து சோதனை செய்து இருக்கிறார்கள்.

ஜெயலலிதா தங்கி இருந்த அறையை சோதனை செய்ய அனுமதி கேட்டார்கள். நாங்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.

அதைத் தவிர வீட்டில் உள்ள பிற அறைகள் அனைத்தையும் சோதனை செய்தார்கள். ஜெயலலிதாவுக்கு ஏராளமானோர் கடிதம் எழுதி இருந்தார்கள். அதை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்று இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் 2 பென்டிரைவ், 2 லேப்டாப் ஆகியவற்றையும் எடுத்துச் சென்று இருக்கிறார்கள்.

இதைத்தவிர வேறு எதுவும் அவர்கள் எடுத்துச் செல்லவில்லை. இதுதொடர்பாக நேரில் அழைத்து விசாரணை நடத்துவார்கள். எப்போது அழைத்தாலும் நாங்கள் நேரில் சென்று பதில் அளிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து விவேக்கிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– உங்களை விசாரணைக்கு அழைத்தார்களா?

பதில்:– இல்லை. என்னுடைய சகோதரியை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து வந்தார்கள். அதனால் நான் வந்தேன்.

கேள்வி:– சசிகலா அறையை சோதனை செய்தார்களா?

பதில்:– அவர் தங்கி இருந்த அறை உள்பட மற்ற அனைத்து அறைகளையும் சோதனை செய்து இருக்கிறார்கள். நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை கோவிலாக கருதுகிறோம் என்று பலர் சொல்கிறார்கள். அந்த கோவிலுக்கு இன்று துன்பம் வந்து இருக்கிறது. ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்பட யாரும் தட்டிக்கேட்கவில்லை. வருத்தமாக இருக்கிறது.

கேள்வி:– யாரையும் கைது செய்து இருக்கிறார்களா?

பதில்:– யாரையும் கைது செய்யவில்லை.

கேள்வி:– இந்த சோதனையில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா?

பதில்:– ஜெயலலிதாவுக்கு பலர் எழுதிய கடிதத்தை எடுத்துச்சென்று இருக்கிறார்கள். 2 அல்லது 3 லோடு பண்டல் எடுத்து இருக்கிறார்கள். இதுசம்பந்தமாக யாரை அழைத்து கேள்வி கேட்க போகிறார்கள் என்று தெரியவில்லை. அதற்கு பதில் சொன்ன பிறகு இந்த வழக்கு எப்படி போகிறது? அவர்களுடைய கேள்விகள் எப்படி இருக்கிறது? என்பதை வைத்து தான் அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா? என்று சொல்ல முடியும். இவ்வாறு விவேக் கூறினார்.

மூலக்கதை