சிறுமுகையில் தேசிய வங்கிகள் பற்றாக்குறை! பட்டு விற்பனையில் கொட்டுகிறது பணம் ?

தினமலர்  தினமலர்

மேட்டுப்பாளையம்;பட்டு நகரமாக மாறிவிட்ட சிறுமுகை பகுதியில் தற்போதுள்ள வங்கிகளின் எண்ணிக்கை பற்றாக்குறையால், வியாபாரிகள், விவசாயிகள் தங்களின் பணம் பரிவர்த்தனை செய்வதற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் திறக்கப்படவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகாவில் சிறுமுகை பேரூராட்சி உள்ளது. இங்கு நகரம் உள்பட, 12 கிராமங்களில், 2011 ல் கணக்கெடுப்படி, 18 ஆயிரத்து, 225 பேர் உள்ளனர். தற்போது, இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்பகுதி பவானி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளதால், 90 சதவீதம் வாழை விவசாயம் முக்கியத் தொழிலாகும்.மேலும், சிறுமுகை பகுதியில் கைத்தறி நெசவு மற்றும் பட்டு நெசவு அபரிமிதமாக வளர்ச்சி பெற்றுவருகிறது. இது மட்டுமின்றி நகரை சுற்றிலும் சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகளும் உருவாகியுள்ளது. இதன் மூலம் வளர்ச்சி அடைந்து வரும் நகரமாக சிறுமுகை மாறிவருகிறது.
வங்கிகள் நெருக்கடி
தற்போது இரு அரசு வங்கிகள், இரண்டு தனியார் வங்கி, ஒரு கூட்டுறவு வங்கி என, நான்கு வங்கிகள் மட்டுமே உள்ளன.இதில் ஒரு அரசு வங்கியில், 25 ஆயிரம் வாடிக்கையாளர்களும், ஒரு தனியார் வங்கியில், எட்டாயிரம் வாடிக்கையாளர்களும் உள்ளனர். இந்த வங்கிகளில் மட்டுமே அதிகளவில் பொது மக்கள் வங்கி கணக்கை துவக்கி உள்ளனர். இதனால், வங்கியில் பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் காலதாமதம் ஆகிறது. எனவே, சிறுமுகையில் தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகள் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டு ஜவுளி கடை உரிமையாளர் தண்டபாணி கூறியதாவது:சிறுமுகையில், 55 பட்டு ஜவுளிக்கடைகள் உள்ளன. இதை சார்ந்த பட்டுநுால் விற்பனை கடைகளும் உள்ளன. இவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். சிலர் தனியார் வங்கிகளிலும் கணக்கு வைத்துள்ளனர். இந்த வங்கிகளில் எப்போதும் கூட்டமாக இருப்பதால், வர்த்தகர்கள் வங்கிக்கு காலையில் சென்றால், மதியம் தான் வருகின்றனர்.
பண பரிவர்த்தனை செய்வதற்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஆகிறது. இதனால் தொழில் மற்றும் வணிகம் பாதிப்பு அடைகிறது. எனவே, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், ஏ.டி.எம்., மையங்களும் கூடுதலாக திறக்க வேண்டும்.இவ்வாறு தண்டபாணி கூறினார்.
லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:விஸ்கோஸ் ஆலை இயங்கியபோது சிறுமுகை வருவாய் நிறைந்த நகரமாக இருந்தது. ஆலை மூடிய பிறகு வருவாய் குறைந்த நகரமானது. ஆனால், பட்டு உற்பத்தியில் தற்போது சிறுமுகை முன்னிலையில் உள்ளது. இதனால், வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து பட்டுச் சேலைகளை வாங்கி செல்கின்றனர். மேலும், மூன்று பெரிய கல்வி நிறுவனங்களும், ஒரு தொழிற்சாலையும் உள்ளன. எனவே, மக்கள் வசதிக்காக அரசு கூடுதலாக அரசு வங்கிகளை துவக்க வேண்டும். இவ்வாறு, ராஜேந்திரன் கூறினார்.
விவசாயி சபாபதி கூறியதாவது:சிறுமுகையை சுற்றியும், 5,000 ஏக்கருக்கு மேல் வாழை மற்றும் அதனை சார்ந்த விவசாயம் பிரதானமாக உள்ளது. இயற்கை சீற்றம் பாதிப்பு இல்லா மல் நல்ல முறையில் வாழை விளைந்தால், ஒவ்வொரு விவசாயிக்கும், 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். வாழை அறுவடையின் போது, பெரும்பாலான வியாபாரிகள் வங்கிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்கின்றனர். அந்த பணத்தை எடுக்க விவசாயிகள் வங்கிக்கு சென்றால், அரை நாள் வீணாகிறது. தனியார் வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும், 25 ரூபாய் பிடிக்கின்றனர். விவசாயிகளின் நலன் கருதி, அரசு சிறுமுகையில் மேலும் கூடுதலாக அரசு வங்கிகள் திறக்க வேண்டும். இவ்வாறு, விவசாயி சபாபதிகூறினார்.

மூலக்கதை