அரசு கட்டடம் ஆக்கிரமிப்பில் இருந்தாலும் தூள் தூள்! மாநகராட்சி துணை கமிஷனர் அதிரடியாக அறிவிப்பு

தினமலர்  தினமலர்
அரசு கட்டடம் ஆக்கிரமிப்பில் இருந்தாலும் தூள் தூள்! மாநகராட்சி துணை கமிஷனர் அதிரடியாக அறிவிப்பு

சமீபத்திய மழை பாதிப்புகளை தொடர்ந்து, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் வேகம் பிடித்துள்ள நிலையில், கூவத்தில், நேற்றும், 387 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. இந்த பணிகளை ஆய்வு செய்ய வந்த, மாநகராட்சி துணை கமிஷனர், கோவிந்தராவ், 'நீர்நிலை ஆக்கிரமிப்பில், அரசு கட்டடமே இருந்தாலும் அகற்றப்படும்' என, அதிரடியாகஅறிவித்திருப்பது, சமூக ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கூவம் நதி மறு சீரமைப்பு பணிகளை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கூவத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கப்பட்டு, படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன.இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கள் அகற்றப்பட்டுள்ள நிலையில், பல்வேறு எதிர்ப்புகளை மீறி, இப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

நேற்று, அரும்பாக்கம் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 387 வீடுகளை, மாநகராட்சி அதிகாரிகள், அதிரடியாக இடித்து தள்ளினர். இதில், 231 குடும்பங்களை, படப்பை அடுத்த, நாவலுாரிலும், 156 குடும்பங்களை,திருவொற்றியூரிலும் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு, மறு குடியமர்வு செய்யப்படுகின்றனர்.

ஆக்கிரமிப்பாளர்கள், தங்களது உடைமைகளை எடுத்துச் செல்ல, மாநகராட்சியே சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மறு குடியமர்வு செல்வோருக்கு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை புதிய முகவரிக்கு மாற்றிக் கொடுக்கவும், குழந்தைகளை பள்ளி, கல்லுாரிகளில் சேர்க்கவும், மாநகராட்சியே முன்னின்று உதவி செய்து வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்த, மாநகராட்சி துணை கமிஷனர், மந்திர் கோவிந்தராவ், ஆக்கிரமிப்பாளர்களிடம், குறைகளை கேட்டறிந்தார். குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும் என, உறுதியளித்தார்.

அப்போது துணை கமிஷனர், கோவிந்தராவ் அளித்த பேட்டி: கூவத்தை மேம்படுத்தும் திட்டத்தில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. கூவத்தில், மொத்தம், 14 ஆயிரத்து, 285 ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில், 1,199 ஆக்கிரமிப்புகள், இதுவரை இடிக்கப்பட்டு, அந்த குடும்பங்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளன. அரும்பாக்கம், முத்துமாரியம்மன் நகர் ஆக்கிரமிப்பாளர்கள், தற்போது மறு குடியமர்வு செய்யப்படுகின்றனர்.

நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும். அரசு அலுவலக கட்டடம், ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்தாலும், பாரபட்சமின்றி அகற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார். அமைந்தகரை அருகே கூவத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் கட்டப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, துணை கமிஷனர் இவ்வாறு கூறினார்.

சென்னையை பொறுத்த வரையில், கூவம், அடையாறு ஆகிய ஆறுகளிலும், மற்ற நீர்வழித்தடங்களிலும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாநகராட்சி தான் செய்ய வேண்டும்.அடையாற்றிலும், கூவத்திலும், வீடுகள்மட்டுமின்றி, தொழிற்சாலைகள், அலுவலககட்டடங்களும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதுவரை உள்ளூர் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்போடு, ஆக்கிரமிப்பாளர்கள் தப்பி வந்தனர்.ஆனால், சமீபத்திய மழை பாதிப்புகளுக்கு பின், ஆக்கிரமிப்புகளை அகற்றும் விஷயத்தில், தமிழக அரசு உறுதியாக செயல்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐ.ஏ.எஸ்.,அதிகாரி, அமுதா தலைமை யிலான அதிகாரிகள் குழு, அங்குள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை நொறுக்கி வருகிறது.சென்னையிலும் அடுத்தடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட இருப்பதால், ஆக்கிரமிப்பாளர்கள் மத்தி யில் கலக்கம் ஏற்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

மூலக்கதை