கார்த்திகை பட்ட சாகுபடி துவங்கியது!வெங்காய நடவு பணி தீவிரம்

தினமலர்  தினமலர்
கார்த்திகை பட்ட சாகுபடி துவங்கியது!வெங்காய நடவு பணி தீவிரம்

பொங்கலூர் :கார்த்திகை பட்ட சாகுபடிதுவங்கியுள்ளதால், சின்ன வெங்காயம் நடவு செய்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
பொங்கலூர் பகுதியில், சின்ன வெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. சில ஆண்டுகளாக போதிய மழையின்றி, வெங்காய சாகுபடி செய்வதை விவசாயிகள் கைவிட்டனர். சின்ன வெங்காயம் வைகாசி மற்றும் கார்த்திகை பட்டங்களில் நன்கு விளையும். தற்போது கார்த்திகை பட்டம் துவங்கியுள்ளது; இது, தை வரை நீடிக்கும்.
இந்தாண்டு வெங்காய விலை உச்சத்தில் உள்ளதால், விதை வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. நாட்டு ரக வெங்காயம், இரண்டு மாதத்தில் அறுவடைக்கு வந்து விடும். இதற்கு குறைந்த தண்ணீர் இருந்தால் போதுமானது. இது தற்போது, கிலோ, 140 ரூபாய் வரை விலை போகிறது.
விதை வெங்காயம் வாங்க முடியாததால், ஒரு சிலரை தவிர பெரும்பாலான விவசாயிகள், விதை மூலம் உற்பத்தி செய்யப்படும், ஹைபிரீட் ரகத்தை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். வெங்காயம் நடவு செய்ய வசதியாக, கடந்த ஒரு மாதமாக நாற்றங்கால் தயாரிக்கும் பணி நடந்தது. தற்போது, நாற்று நல்ல வளர்ச்சி அடைந்துள்ளதால், வெங்காய நடவு பணியை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
பொங்கலூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:அதிக விலைக்கு விதை வெங்காயம் வாங்க முடியாததால், ஹைபிரீட் ரகத்தை தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது, நாற்று விட்டதில் இருந்து அறுவடைக்கு வர, நான்கு மாதம் ஆகும். இந்தாண்டு தென் மேற்கு பருவமழை நன்றாக பெய்த போதிலும், மிக அதிக வறட்சி காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் எதிர்பார்த்தபடி உயரவில்லை.
எனவே, நாட்டு ரகத்தை விட ஹைபிரீட் ரகத்துக்கு, தண்ணீர் அதிகம் தேவைப்படும். பி.ஏ.பி., பாசனம் நடக்கும் பகுதிகளில் மட்டும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தண்ணீர் வசதியுள்ளவர் மட்டுமே வெங்காயம் நடவு செய்கின்றனர். இன்னும், 90 சதவிகித விவசாய நிலங்களில் சாகுபடி துவங்கவில்லை. தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே, வெங்காய நடவு தீவிரமாகும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை