கொப்பரை, நார் உற்பத்தி மையங்களில் கண்காணிப்பு தீவிரம்!திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமரா

தினமலர்  தினமலர்

கோவை மாவட்டம், மாநில அளவில் தென்னை சாகுபடியில் முதலிடம் பெற்றுள்ளது. குறிப்பாக, பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் நெகமம் பகுதி விவசாயிகள், தென்னையை மட்டுமே அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.
தென்னையில் இருந்து தேங்காய் மட்டுமல்லாது, இளநீர் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளூரிலும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.மேலும், தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு மூலப்பொருளான கொப்பரை, பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம் சுற்றுப்பகுதியில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக, 400க்கும் மேற்பட்ட கொப்பரை உலர் களங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், உள்ளூர், வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.வறட்சி காரணமாக தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதால், எப்போதும், பரபரப்பாக காணப்படும் கொப்பரை உலர் களங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. உற்பத்தியாகும் தேங்காய்க்கு, உணவு தேவைக்கான கிராக்கி உள்ளதால், கொப்பரை உற்பத்தி முடங்கியுள்ளது.
இதனால், கொப்பரை விலை அதிகரித்து வருகிறது. கொப்பரை கிலோவுக்கு, 123 ரூபாய் விலை கிடைக்கிறது. இதனால், கொப்பரை களங்களில் இரவு நேரத்தில் தொடர் திருட்டு நடக்கிறது. ஒரு சில கொப்பரை களங்களில் மட்டும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், திருட்டில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க முடிவதில்லை.
பெரும்பாலான களங்களில், ஆள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், சில நாட்களுக்கு முன் வடசித்துார் அருகே, பனப்பட்டியில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும், 1.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 20 மூட்டை கொப்பரை திருடப்பட்டது. இதுபற்றி போலீசாரும் விசாரிக்கின்றனர்.இந்நிலையில், கொப்பரை உற்பத்தியாளர்கள் பாதுகாப்பை பலப்படுத்த, கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, ரோட்டோரம் நார் உற்பத்தி மையங்களை துவக்கி, ஆண்டுக்கு கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் நார் உற்பத்தியாளர்களும், தங்கள் தொழிலை பாதுகாத்து, நார் உற்பத்தியை பாதுகாக்க பாதுகாவலரை மட்டுமல்லாது, கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகின்றனர்.ஏற்கனவே, கொப்பரை மற்றும் நார் உற்பத்தி மையங்களில், 10 சதவீத கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து உலர் களம் மற்றும் தொழிற்சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த உற்பத்தியாளர் சங்கத்தில் முடிவெடுத்துள்ளனர்.
கொப்பரை உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'கொப்பரை விலை தினமும் மாறுபட்டுக்கொண்டே உள்ளது. தேங்காய் வரத்து குறைந்துள்ள நிலையில், கொப்பரை விலை வேகமாக உயர்ந்து வருகிறது. வறட்சி காரணமாக வேலை வாய்ப்பு இல்லாத நிலையில், கொப்பரை களங்களை கண்காணித்து, இரவு நேரத்தில் திருட்டு வேலைகளில் சிலர் ஈடுபடுகின்றனர்.
திருட்டு கும்பல் குறித்து தகவல் கிடைத்தாலும், ஆதாரம் இல்லாததால், போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. அதனால், கண்காணிப்பை பலப்படுத்தி, திருட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது,' என்றனர்.
ஆர்வம் அதிகரிப்பு!
கடந்த மூன்று ஆண்டுகளாக, கொப்பரைக்கு கட்டுபடியான விலை கிடைப்பதால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தென்னையில் நோய் தாக்குதல், வறட்சி பாதிப்பு இருந்தாலும், தேங்காய்க்கு கணிசமான விலை கிடைப்பது விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கிறது.கொப்பரை வியாபாரத்தில் லாபம் கிடைப்பதால், கொப்பரை உலர் களம் அமைக்க விவசாயிகளிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, கொப்பரை களம் அமைக்க மத்திய அரசு, 25 லட்சம் ரூபாய் வங்கி மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கிறது. இதில், 8.75 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.

மூலக்கதை