பாதாள சாக்கடை அமைக்கப்பட்டால் கொசு வராது; துர்நாற்றம் வீசாது! 3 ஆண்டுகளுக்குள் செயல்படுத்த இலக்கு

தினமலர்  தினமலர்
பாதாள சாக்கடை அமைக்கப்பட்டால் கொசு வராது; துர்நாற்றம் வீசாது! 3 ஆண்டுகளுக்குள் செயல்படுத்த இலக்கு

கோவை:மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன், குறிச்சி, குனியமுத்துாரில் ரூ.442 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த,மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. நிர்வாக அனுமதி, தொழில்நுட்ப அனுமதி கிடைத்து விட்டதால், குடிநீர் வடிகால் வாரியம் மூலம்,3 ஆண்டுகளுக்குள் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கோவையில் பழைய மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. விடுபட்ட பகுதியில் குழாய் பதித்து, இணைப்பு வழங்கப்படுகிறது. உக்கடம், ஒண்டிபுதுாரில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் செயல்படுகிறது. நஞ்சுண்டாபுரத்தில் கட்டுவதற்கு, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்ததால், கிடப்பில் போடப்பட்டது.
வழக்கு விசாரணையில் இருந்தாலும், கட்டுமான பணிகளை கைவிடாமல் தொடர்ந்து செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததால், மறுமதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. நிதி ஒதுக்கீடு செய்து விட்டதால், விரைவில் பணிகள் துவக்கப்படும்.
திருச்சி ரோட்டில், 5 கி.மீ., நீளத்துக்கு பிரதான குழாய் பதிக்க வேண்டியுள்ளது. ரோட்டில் குழி தோண்ட, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். இதற்கும் தேவையான நிதி கிடைத்துவிட்டது; வேலையை துவக்க, மாநகராட்சி 'நல்ல நேரம்' பார்த்துக் கொண்டிருக்கிறது.
அடுத்த கட்டமாக, குறிச்சி, குனியமுத்துார் பகுதியில், ரூ.442 கோடிக்கு பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக செயல்படுத்த அனுமதி கிடைத்திருக்கிறது. மத்திய அரசு - 33 சதவீதம், மாநில அரசு - 20 சதவீதம், மாநகராட்சி - 47 சதவீதம் பங்களிப்பு தொகை செலுத்தும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, குறிச்சி, குனியமுத்துார் மாநகராட்சி பகுதிகள், 14 வார்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. 2011ல் எடுத்த கணக்கெடுப்பு அடிப்படையில், 2,21,870 மக்கள் வசிக்கின்றனர். 2020ல், 2,58,734 மக்கள் வசிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதே மக்கள் தொகை, 2035ல் 3,41,164 எனவும், 2050ல் 4,49,716 எனவும் அதிகரிக்கும்.
தினமும், 30.53 மில்லியன் லிட்டர் கழிவு நீர் சேகரமாகும். இது, 2035ல் 40.25 மில்லியன் லிட்டராகவும், 2050ல், 53.07 மில்லியன் லிட்டராகவும் அதிகரிக்கும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. இதற்காக, 17 இடங்களில், 'பம்ப்பிங் ஸ்டேஷன்' அமைக்கப்படும்.வெள்ளலுார் கழிவு நீர் பண்ணை வளாகத்தில், சுத்திகரிப்பு மையம் கட்டப்படும். குறைவான பரப்பளவில் இம்மையம் அமையும் வகையிலும், துர்நாற்றம் வீசாத வகையிலும், புதிய தொழில்நுட்பம் கையாள, குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்திருக்கிறது. மேலும், வளாகம் முழுவதும் மரக்கன்று நடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. சுத்திகரிக்கும் கழிவு நீரை, விவசாயத்துக்கும், தொழிற்சாலை பயன்பாட்டுக்கும் கூட பயன்படுத்தலாம்.
இத்திட்டத்தில், 150 மி.மீ., விட்டம் முதல், 900 மி.மீ., விட்டம் உடைய குழாய், 496.49 கி.மீ., துாரம் பதிக்கப்படும். 17 ஆயிரத்து, 614 ஆள்இறங்கு குழிகள் அமைக்கப்படும். 55 ஆயிரத்து, 747 வீட்டு இணைப்புகள் வழங்கப்படும். ஓராண்டுக்குள் 'டெண்டர்' பணிகள் முடியும்.வேலை துவங்கிய நாளில் இருந்து, இரண்டு ஆண்டுகளில், இத்திட்டம் செயலாக்கத்துக்கு வரும். 6 மாதம் சோதனை முறையில் இயக்கப்படும். ஒப்பந்ததாரர், 5 ஆண்டுகள் தொடர்ந்து பராமரிக்க நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம், குனியமுத்துார் தெற்கு மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. குடிநீர் வடிகால் வாரியம் கண்காணிப்பு பொறியாளர் சொக்கலிங்கம், நிர்வாக பொறியாளர் பாஸ்கரன், மாநகராட்சி நகர பொறியாளர் பார்வதி, நிர்வாக பொறியாளர் ஞானவேல், உதவி கமிஷனர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சுகாதாரப் பிரச்னை, உடல் நலத்துக்கு கேடு வருமா, 'டிபாசிட்' தொகை செலுத்துவது, ஆண்டு கட்டணம் செலுத்துவது, இத்திட்டத்தால் என்ன பயன் என, பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். பங்கேற்ற மக்களில் பலருக்கு மழை நீர் வடிகாலுக்கும், பாதாள சாக்கடை திட்டத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை. அதனால், திட்டம் தொடர்பாக, அதிகாரிகள் விளக்கினர்.
அதேநேரம், குறிச்சியில் நடந்த கூட்டத்துக்கு, முன்னாள் நகராட்சி தலைவர் பிரபாகரன், குறிச்சி - வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.'கூட்டம் தொடர்பாக முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்; திரளான மக்களை திரட்டி, திருமண மண்டபத்தில் ஆலோசிக்க வேண்டும்; அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனத்தினர், குடியிருப்போர் நலச்சங்கத்தினரை அழைக்க வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தினர். அதனால், தேதி குறிப்பிடாமல், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
முக்கியமான திட்டம்!
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தினால், இனி, வீடுகளில் 'செப்டிக் டேங்க்' கட்ட வேண்டிய அவசியம் ஏற்படாது. வீட்டில் இருந்து வெளியேற்றும் அனைத்து விதமான கழிவுகளையும் கொண்டு செல்லலாம். எங்கும் கழிவு நீர் தேங்காது; கொசுப்பிரச்னை வராது. வடிகாலில், மழைநீர் மட்டுமே செல்லும் வகையில் இணைப்பு கொடுத்து, குளங்களில் சேகரிக்கப்படும். வளரும் நகரங்களுக்கு மிக முக்கியமான திட்டம். இதை பொதுமக்கள் உணர வேண்டும்' என்றனர்.

மூலக்கதை