சிக்கலில் இம்சை அரசன் வடிவேலு?

PARIS TAMIL  PARIS TAMIL
சிக்கலில் இம்சை அரசன் வடிவேலு?

 குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, 1991-ல் என் ராசாவின் மனசிலே படத்தில் பிரபலமாகி இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். ‘போடா போடா புண்ணாக்கு,’ ‘எட்டணா இருந்தா,’ ‘வாடி பொட்ட புள்ள வெளியே’ உள்பட பல பாடல்களையும் பாடி உள்ளார்.

 
2006-ல் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் வடிவேலு கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. தொடர்ந்து இந்திரலோகத்தில் நா.அழகப்பன், தெனாலிராமன், எலி போன்ற படங்களிலும் கதாநாயகனாக வந்தார். மற்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடிப்பதை நிறுத்தினார்.
 
அதன்பிறகுதான் சந்தானம், சூரி உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்கள் பிரபலமானார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷாலுடன் கத்தி சண்டை, லாரன்சுடன் சிவலிங்கா, சமீபத்தில் திரைக்கு வந்த விஜய்யின் மெர்சல் படங்களில் நடிகர் வடிவேலு மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருந்தார்.
 
 
 
இம்சை அரசன் இரண்டாம் பாகம் படத்தை சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலுவை கதாநாயகனாக நடிக்க வைத்து தயாரிக்க இயக்குனர் ஷங்கர் முடிவு செய்தார். கதாநாயகியாக பார்வதி ஓமன குட்டன் தேர்வு செய்யப்பட்டார். இந்த படத்துக்கு ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ என்று பெயரிடப்பட்டது.
 
கடந்த ஆகஸ்டு மாதம் படவேலைகள் தொடங்கின. சென்னையில் ரூ.3 கோடி செலவில் அரண்மனை அரங்குகள் அமைத்து அதில் வெளிநாட்டு அழகிகளுடன் வடிவேலு ஆடிப்பாடுவது போன்ற பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. பின்னர் வசன காட்சிகள் படமாக்கப்பட்டன.
 
 
 
அப்போது இயக்குனர் சிம்புதேவனுக்கும் வடிவேலுவுக்கும் திரைக்கதையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இயக்குனர் ஷங்கர் இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினார். ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட உடைகளில் திருப்தி இல்லாமல் அவற்றை அணிய வடிவேலு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
 
இதனால் படப்பிடிப்பு மீண்டும் நின்று போனது. இதைத்தொடர்ந்து பட அதிபர் தரப்பில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலு மீது புகார் கொடுக்கப்பட்டது. வடிவேலுவிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டு பட அதிபர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
 
தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ஞானவேல்ராஜா சென்னையில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் ‘அண்ணாதுரை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசும்போது, “எல்லோரும் ரசித்து சிரிக்கும் காமெடி நடிகர், தான் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கு தொல்லை கொடுக்கிறார். அந்த தயாரிப்பாளர் பட அதிபர்கள் சங்கத்தில் புகார் அளித்து இருக்கிறார். நகைச்சுவை நடிகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 
 

மூலக்கதை