குஜராத் சட்டமன்ற தேர்தல்: 35 பாஜ எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
குஜராத் சட்டமன்ற தேர்தல்: 35 பாஜ எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பு

அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் தற்போது எம்எல்ஏக்களாக இருக்கும் 35 பேருக்கு மீண்டும் போட்டியிட பாஜ மேலிடம் வாய்ப்பு மறுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் 6 அமைச்சர்களும் அடங்குவர்.
குஜராத் சட்டமன்றத்துக்கு வரும் டிசம்பர் 9 மற்றும் 14 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநிலத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பாஜ தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. படேல் இடஒதுக்கீடு விவகாரம், பசு பாதுகாவலர்களால் தலித்கள் தாக்கப்படும் விவகாரம் போன்றவை பாஜவுக்கு எதிராக உள்ளன.

இது தவிர மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் போன்றவை மக்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும் பாஜ மீண்டும் வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தலைவராக விரைவில் ராகுல் பதவி ஏற்க உள்ள நிலையில் இந்த தேர்தல் அவருக்கு கவுரவ பிரச்னையாக உள்ளது. இதனால் அங்கு அவர் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.



வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இரு கட்சிகளும் மிக கவனமாக உள்ளன. முதல் கட்ட தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் இரு கட்சிகளும் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.

இதற்கிடையில் பாஜவுக்கு தற்போது உள்ள 121 எம்எல்ஏக்களில் 35 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என பாஜ வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் 6 அமைச்சர்கள் பெயர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

வேட்பாளர் தேர்வு குறித்து நேற்று இரவு பிரதமர் நரேந்திரமோடியும், பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.

அடுத்த 2 நாட்களில் 150 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை