வீடு தேடி செல்லும் ரேசன் கார்டு, லைசென்ஸ்உள்பட 40 விதமான அரசு சேவைகள்: டெல்லியில் கெஜ்ரிவால் அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
வீடு தேடி செல்லும் ரேசன் கார்டு, லைசென்ஸ்உள்பட 40 விதமான அரசு சேவைகள்: டெல்லியில் கெஜ்ரிவால் அதிரடி

புதுடெல்லி: ரேசன் கார்டு, ஓட்டுனர் உரிமம், சாதி சான்றிதழ் உள்பட அரசு ஆவணங்களை  வீடு தேடி  சென்று கொடுக்கும் திட்டத்தை டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.

நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில்,  அரசின் சேவைகளான ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பென்சன் திட்டம், ஊனமுற்றோர்களுக்கு சான்றிதழ், வருமான மற்றும் சாதி சான்றிதழ்கள்  உள்பட 40 வகையான அரசு சேவைகளை பெற மக்கள் இதுவரை அரசு அலுவலகங்களை தேடி வந்தனர். இந்த முறையில் கால தாமதம், அலைச்சல், விரைவில் ஆவணத்தை வழங்க  லஞ்சம் உள்பட பல்வேறு சம்பவங்கள் நடக்கிறது.

இதனால் அரசுக்கு அவப் பெயர் உண்டாகி வருகிறது. தற்போது அனைத்து துறைகளும்  டிஜிட்டல் மயமாகி வருவதால்  இனி அரசு ஆவணங்களைப் பெற என்ன வேண்டுமோ அதை செல்போன் மூலம் பெற வசதி செய்யப்பட இருக்கிறது.

இந்திட்டத்திற்கு ‘மொபைல் சகாயக்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நாட்டிலே முதன் முறையாக ஆரம்பிக்கப்படும் இந்த திட்டத்தில் தனியார் ஏஜென்சிகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. ஒருவருக்கு சாதி சான்றிதழ் தேவைப்பட்டால் அவர் அரசு ஏற்பாடு செய்துள்ள கால் சென்டருக்கு போன் செய்து தகவலை சொன்னால் போதும்.   மொபைல் சகாயக் குழு சாதி சான்றிதழ் கேட்டவரின் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்யும்.

அதன் பிறகு கேமரா இணைக்கப்பட்ட பயோ மெட்ரிக் முறைப்படி
அவர் கேட்ட சாதி சான்றிதழை வழங்குவார்கள். இதற்காக சாதாரணமாக என்ன தொகை செலவாகிறதோ அதை கட்டணமாக வாங்கிக் கொள்வார்கள்.

இந்தக் கட்டணத் தொகை சீரான, சரியான தொகையாக இருக்கும் என பேசப்பட்டது. இது தொடர்பாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியது: வீடு தேடி சென்று  8 துறைகளில், 40 வகையான சேவைகள் வழங்கும் புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

முதல் கட்டமாக ஜாதி சான்றிதழ், குடிநீர் குழாய் இணைப்பு அனுமதி சான்று, புதிய ரேசன் கார்டு வழங்குதல், ஓட்டுனர் உரிமம் வழங்குதல், திருமணப்பதிவு சான்றிதழ் உள்ளிட்ட 10 சேவைகள் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள  30 சேவைகள் இரண்டாம் கட்டமாக வழங்கிட திட்டமிட்டுள்ளோம்.   இத்திட்டம் அடுத்த வருடம் முதல் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சேவையின் கீழ் பொதுமக்கள் வீடு தேடி சென்று அவர்களிடம் தேவையான ஆவணங்களை பெற்று தர தனியார் ஏஜென்சிகள் பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை