ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலவரம்: ‘தீ வைத்த பெண் போலீஸ் யார் என்று தெரியவில்லை’ காவல்துறை தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலவரம்: ‘தீ வைத்த பெண் போலீஸ் யார் என்று தெரியவில்லை’ காவல்துறை தகவல்

சேலம்: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தப்பட்டது. பல மாவட்டங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சென்னை, கோவையில் கலவரம் வெடித்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரனை, தமிழக அரசு நியமித்தது.

அவர் விசாரணை நடத்தி வருகிறார். சேலத்தில் நேற்று அவர் 7 பேரிடம் விசாரணை நடத்தினார். முன்னதாக அவர்  அளித்த பேட்டி: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக சென்னையில் 888, மதுரையில் 996, கோவையில் 50, சேலத்தில்11,  திருச்சியில் 6 பேர் என மொத்தம் 1951 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

சேலத்தில் போலீசுக்கு ஆதரவாக 7 பேரும், பொதுமக்கள் 2 பேரும்,போலீசார் 2 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.   மதுரை, கோவையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கோவையில் மீண்டும்  28ம்தேதி முதல் 3 நாட்கள் விசாரணை நடத்தப்படும்.

இந்த விசாரணை முடிய இன்னும் 7 அல்லது 8 மாதங்கள் ஆகும்.

இதுவரை 447 பேருக்கு  சம்மன் அனுப்பியுள்ளோம். இதில் 108  பேரிடம் விசாரணை முடிந்து விட்டது.

வாட்ஸ்அப்பில் போராட்டம் குறித்த வீடியோக்கள் வெளியானது. ஆனால் அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது விசாரணை முடிவில் தான் தெரியும். சென்னையில் ஆட்டோவில் பெண் போலீஸ் தீ வைத்த காட்சியும் வெளியானது.

அது யார் என்பதை கண்டுபிடிக்கும் படி போலீஸ் அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். ஆனால் அது யார்? என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறியுள்ளனர்.

அந்த பகுதியில் யாரெல்லாம் பணியில் இருந்தார்கள்? என்பது குறித்து விசாரிக்கும் படி கூறியிருக்கிறேன். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்களுக்கும், கருத்து சொன்ன நடிகர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜனவரி 23ம்தேதி நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு யார் காரணம், ஏன் பிரச்னை உருவானது? காவல்துறையின் அத்துமீறல் இருந்ததா? என்பது குறித்து மட்டுமே விசாரணை நடத்தப்படும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த வழக்குக்கும், எனது விசாரணைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இவ்வாறு ராஜேஸ்வரன் கூறினார்.

.

மூலக்கதை