குஜராத் தேர்தலில் கடும் போட்டி வேட்பாளர்கள் அறிவிப்பதில் பாஜ, காங்., தாமதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குஜராத் தேர்தலில் கடும் போட்டி வேட்பாளர்கள் அறிவிப்பதில் பாஜ, காங்., தாமதம்

அகமதாபாத்:குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்பாளர்களை அறிவிப்பதில் பாஜ, காங்கிரஸ் கட்சிகள் தாமதம் செய்து வருகின்றன. இரு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுவதால் இந்நிலை நீடிக்கிறது.

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 9, 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9ல் தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கியது. வருகிற 21ம் தேதி கடைசி நாளாகும்.

வேட்புமனு தாக்கல் முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், பாஜ, காங்கிரஸ் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

இந்த தேர்தலில் பாஜ, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடியும் அதிக இடங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். கடுமையான போட்டி காரணமாக இரு கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

பாஜ வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பான கூட்டம், டெல்லியில் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல், காங்கிரஸ் தலைமையும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.


.

மூலக்கதை