தங்கம், வெள்ளி கொள்ளை நகைக்கடை உரிமையாளர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தங்கம், வெள்ளி கொள்ளை நகைக்கடை உரிமையாளர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

புழல்: புழல் அருகே பட்டப்பகலில் ஒரு நகைக்கடையின் மேற்கூரையை உடைத்து, அங்கு ஷோகேசில் இருந்த 3. 5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி மற்றும் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை பிடிக்க 4 தனிப்படையினர் விரைந்துள்ளனர். சென்னை கொளத்தூர், நகர் 2வது தெருவை சேர்ந்தவர் முகேஷ்குமார் (40).

இவர், புழல் அடுத்த புதிய லட்சுமிபுரம்-கடப்பா சாலையில், ‘மகாலட்சுமி தங்க மாளிகை’ என்ற நகைக்கடையை கடந்த 13 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இக்கடையின் முதல் மாடியில் கடந்த 10 நாட்களுக்கு முன் வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் துணிக்கடையை துவங்கி நடத்தி வந்தனர். நகைக்கடையில் முகேஷ்குமார் இருக்கும்போது, மதியம் ஒரு மணியில் இருந்து மாலை 4 மணிவரை உணவு இடைவேளைக்காக கடையை அடைப்பது வழக்கம். இந்நிலையில், முகேஷ்குமார் நேற்று மதியம் வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு மதிய உணவு சாப்பிட வீட்டிற்கு சென்றார்.

பின்னர் மாலை 4 மணியளவில் முகேஷ்குமார் மீண்டும் வந்து கடையின் இரும்பு ஷட்டரைத் திறந்து உள்ளே சென்றார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கடையின் மேற்கூரையில் பெரிய துளை காணப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், ஷோகேஸ் மற்றும் சாவியுடன் வைத்திருந்த லாக்கரில் இருந்து 3. 5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் லாக்கரில் இருந்த 2. 50 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது முகேஷ்குமாருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து ராஜமங்கலம் போலீசில் முகேஷ்குமார் புகார் செய்தார்.

இப்புகாரின்பேரில், அண்ணாநகர் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் தலைமையில் ராஜமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயுடன் விரைந்து சென்றனர். நகைக்கடையில் பதிவான மர்ம நபர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி படுத்துக் கொண்டது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், நகைக்கடை உரிமையாளர் முகேஷ்குமாரின் பரிந்துரை பேரில், மேல்மாடியை வடமாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற வாலிபருக்கு துணிக்கடை நடத்த வாடகைக்கு விட்டதாக கட்டிட உரிமையாளர் பாண்டுரங்கன் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, நகைக்கடையை கொள்ளையடித்த வடமாநிலத்தை சேர்ந்த 2 மர்ம ஆசாமிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சென்னை மற்றும் வடமாநிலங்களில் பதுங்கியிருக்கும் மர்ம நபர்களை பிடிக்க விரைந்துள்ளனர்.

இதுதொடர்பாக ராஜமங்கலம் போலீசார், கட்டிட மற்றும் நகைக்கடை உரிமையாளர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை