டெப்போ கேன்டீன்கள் பதிவு சான்று பெறாத விவகாரம்: மாநகர போக்குவரத்து கழக எம்டி மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெப்போ கேன்டீன்கள் பதிவு சான்று பெறாத விவகாரம்: மாநகர போக்குவரத்து கழக எம்டி மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?

சென்னை: கேன்டீன்கள் பதிவு சான்று பெறாமல் இயங்கி வரும் விவகாரத்தில் எம்டிசி மேலாண் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர்கள் 9756 பேர், கன்டக்டர்கள் 10,172 பேர், தொழில்நுட்ப ஊழியர்கள் 2885 பேர் என மொத்தம் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் மொத்தம் 35 போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இங்கு கேன்டீன் வைத்து ஊழியர்களுக்கு நிர்வாகம் மூன்று வேளை உணவு வழங்குகிறது.

ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் கேன்டீன் நடத்தி வருகின்றனர். இங்கு, தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.

நிர்வாகத்திடம் ஊழியர்கள் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 33 கேன்டீன்களிலும் அதிரடியாக சோதனை நடத்தினர். ஆய்வுக்கு பின், கேன்டீன்கள் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் வாங்காமல் இயங்கி வந்தது தெரியவந்தது.

பல கேன்டீன்களில் சமையலறை சுகாதாரமின்றி காணப்பட்டது. உடனே, எம்டிசி மேலாண் இயக்குனர் கிருஷ்ணமூர்த்திக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடிதம் அனுப்பி குறையை நிவர்த்தி செய்யுமாறு உத்தரவிட்டனர். இதற்கிடையில், விதிமீறி ஒப்பந்தம் வழங்கியதற்காக மேலாண் இயக்குனர் மீது உணவு பாதுகாப்புத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஊழியர்கள் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

ஆனால் 3 மாதமாகியும் அதன் மீது ஆணையர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து, தங்கள் நோட்டீஸ் மீது ஆணையர் எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஊழியர்கள் மனு அளித்தனர்.

அந்த மனுவுக்கு தற்போது பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மேலாண் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என்று தெரிவித்திருந்தனர். இதை கேள்விப்பட்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆய்வு செய்வது மட்டும் தான் உணவுப்பாதுகாப்புத் துறையின் வேலையா? என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து, நேதாஜி தொழிற்சங்க நிர்வாகி அன்பழகன் கூறியதாவது:உணவு பாதுகாப்பு சட்டம் 2006ன் படி, உரிமம் மற்றும் பதிவு சான்று இல்லை என்றால் ரூ. 5 லட்சம் அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை வழங்க வேண்டும். எம்டிசி கேன்டீன்களில் தவறு நடந்தது ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பேரில் தான் மேலாண் இயக்குனருக்கு தண்டனை வழங்குமாறு உணவு பாதுகாப்பு ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பினோம். சட்டப்படி, தவறுக்கு காரணமாக இருந்த மேலாண் இயக்குனருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தர ஆணையர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் நாங்கள் அனுப்பிய நோட்டீசை, ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு அனுப்பி தட்டி கழித்துவிட்டார். ஆர்டிஐ மூலம் கேட்டால், தண்டனை பெற்று கொடுக்க அதிகாரம் இல்லை என பதில் அளித்துள்ளார்.

வெறும் ஆய்வு மட்டும் நடத்துவதால் தவறை திருத்திவிட முடியுமா? எனவே, ஊழியர்களின் உயிருடன் விளையாடிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையர் உடனே ஆவணம் செய்ய வேண்டும் என்றார். எம்டிசி அதிகாரியிடம் கேட்டபோது, ‘’உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவை ஏற்று கேன்டீன்களை ஆய்வு செய்தோம்.

அதில் குறைகளை நிவர்த்தி செய்துள்ளோம்.

அதனால் நடவடிக்கை தேவையில்லை’’ என்றார்.

.

மூலக்கதை