காட்டரம்பாக்கம் ஊராட்சியில் 10 ஆண்டாக வளர்ச்சி பணி நடக்கவில்லை

தமிழ் முரசு  தமிழ் முரசு
காட்டரம்பாக்கம் ஊராட்சியில் 10 ஆண்டாக வளர்ச்சி பணி நடக்கவில்லை

ஸ்ரீ பெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் காட்டரம்பாக்கம் ஊராட்சியில் காட்டரம்பாக்கம், சுமந்திரம்பேடு, புதுப்பேடு ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.   ஊராட்சி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கார் மற்றும் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

தொழிற்சாலைகளில் இருந்து தொழில் வரியாக காட்டரம்பாக்கம் ஊராட்சிக்கு கோடி கணக்கில் வருவாய் கிடைக்கிறது. ஊராட்சியில் பத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.

இதில் பள்ளிகூடத்தெரு, பூங்காவனத்தம்மன் தெரு, மேட்டுத்தெரு, பெருமாள் கோயில் தெரு, விநாயகர் கோயில் தெரு ஆகிய தெருக்கள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளன. தற்போது பெய்த கனமழையின்போது தெருக்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.

இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஓரிரு தெருக்களை தவிர மற்ற தெருக்களில் கழிவுநீர் கால்வாய் வசதிஇல்லை.



இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. ஊராட்சி முழுவதும் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது.

மேலும் காலனி சுடுகாட்டிற்கு செல்லும் சாலையும் குண்டும் குழியுமாக உள்ளது. ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சியில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் வரவு-செலவு கணக்கை கேட்டால், முறையான பதில் அளிப்பதில்லை.

தொழில்சாலை மூலம் கிடைக்கும் தொழில் வரியை முறையாக செலவு செய்யாமல் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஊராட்சியில் எவ்வித வளர்ச்சி பணியும் நடக்கவில்லை.

எனவே, பொது மக்கள் நலன் கருதி காட்டரம்பாக்கம் ஊராட்சியில் மேற்கண்ட தெருக்களில் சிமென்ட் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

.

மூலக்கதை