கீரப்பாக்கம் ஏரியில் குப்பை கொட்டிய டிராக்டர் சிறைபிடிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கீரப்பாக்கம் ஏரியில் குப்பை கொட்டிய டிராக்டர் சிறைபிடிப்பு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் பெரிய ஏரிக்கும், கல்குவாரிக்கும் இடையே திறந்தவெளி இடம் உள்ளது. இந்த இடத்தில் 14 ஊராட்சிகள், 8 பேரூராட்சிகள், 2 நகராட்சிகளில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து, சென்னையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஓராண்டுக்கு முன் கிராம மக்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.   இதை எதிர்த்து அப்பகுதி மக்களின் மேல்முறையீடு வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பையை ஏரிப் பகுதியில் கொட்டுவதற்காக, நேற்று டிராக்டரில் பேரூராட்சி ஊழியர்கள் ஏற்றிக்கொண்டு வந்தனர். இதை பார்த்ததும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அரிகிருஷ்ணன், துணைத்தலைவர் இந்திரா தனபால் ஆகியோர் தலைமையில் அருங்கால் கிராம மக்கள் திரண்டு வந்து, ஏரிக்குள் குப்பையை கொட்ட முயற்சித்த டிராக்டரை சுற்றி வளைத்து சிறைப்பிடித்தனர். பின்னர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்ததும் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) குணசேகரன் சம்பவ இடத்துக்கு வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.



அவர்கள், ‘பசுமை நிறைந்த இந்த ஊராட்சியில் வசிக்கும் மக்களிடம் கருத்து கேட்காமல், இங்கு குப்பைகளை கொட்ட அனுமதித்துள்ளனர். இதனால் எங்கள் பகுதியின் நிலத்தடி நீராதாரமாக உள்ள பெரிய ஏரியும் மாசடைந்து உள்ளது. இதன் அபாயத்தை கருதாமல், இங்கு ராணுவ தலைமையகம் மற்றும் குடியிருப்புகள் இருப்பதையும் பொருட்படுத்தாமல், குப்பைகளை கொட்ட அனுமதி அளித்த மாவட்ட நிர்வாகம் எங்களை மதிக்கவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

இதுகுறித்து பசுமை தீர்ப்பாயத்தில் விளக்கிக் கூறியும், அவர்கள் குறிப்பிட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்யாமல் எங்களது மனுவை தள்ளுபடி செய்து, மாவட்ட நிர்வாகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். எனவே, இப்பிரச்னையில் பசுமை தீர்ப்பாயம் உடனடியாகத் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுவரை இங்கு குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டோம்’ என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து அங்கு குப்பை கொட்டாமல் டிராக்டரை மீட்டு பேரூராட்சி ஊழியர்கள் கொண்டு சென்றனர்.

.

மூலக்கதை