கோடநாடு எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை: வெளிநாட்டு பணபரிவர்த்தனை தன் பெயரில் நடந்ததற்கு ஒப்புதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோடநாடு எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை: வெளிநாட்டு பணபரிவர்த்தனை தன் பெயரில் நடந்ததற்கு ஒப்புதல்

கோவை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. இதன் அருகிலேயே கிரீன் டீ எஸ்டேட் உள்ளது.

இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த 9ம் தேதி முதல் 14ம் தேதிவரை 6 நாட்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், பணம், நகை உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கிரீன் டீ எஸ்டேட் மேலாளர் பழனிகுமார் ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் நேற்று (16ம் தேதி) நடராஜனை கோவை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து மாலை வரை விசாரணை நடத்தினர். இதில், பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன் விவரம்:கோடநாடு எஸ்டேட் மற்றும் கிரீன் டீ எஸ்டேட்டில் விளையும் உயர்தர தேயிலை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏற்றுமதி தொடர்பான பணப்பரிவர்த்தனை ஈலாடா பகுதியில் உள்ள தேசிய வங்கி கிளை மூலம் நடந்து வந்தது.

இதனிடையே, கடந்த 2012ம் ஆண்டு இந்த வங்கி கிளை நவீனமயமாக்கப்பட்டு, அந்த வங்கியின் ஏடிஎம் மையத்தை காட்சிமுனை பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதுதவிர, அங்கு தேயிலை தோட்டத்தில் வேலை செய்துவந்த 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வங்கி கணக்கை துவக்கிவைத்தார்.

கோடநாடு எஸ்டேட் பணப்பரிவர்த்தனைகளை விரைவாக்கும் பொருட்டு இந்த வங்கி கிளை நவீனமயமாக்கப்பட்டதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், கடந்த 9ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் இவ்வங்கி கிளையில், கோடநாடு எஸ்டேட் தொடர்பான பணபரிவர்த்தனை, தேயிலை ஏற்றுமதி, விற்பனை தொடர்பான பரிவர்த்தனை கணக்கு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த 2 நாட்களாக நடராஜனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

தேயிலை ஏற்றுமதி தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து நடராஜன் பெயருக்கு பணப்பரிமாற்றம் நடந்தது பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

முதலில் மறுத்த நடராஜன், பின்னர் தனது பெயரில் நடந்த வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. ஆறுமுகசாமியிடம் விசாரணை: கோவை வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9ம் தேதி மணல் வியாபாரி ஆறுமுகசாமியின் அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து அவரை நேற்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர். இதையடுத்து, நேற்று மாலை 3 மணிக்கு கோவை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வந்த ஆறுமுகசாமியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சொத்துகள் வாங்கியது தொடர்பாக 3 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை நடத்தப்பட்டது.

மாலை 6. 30 மணிக்கு விசாரணையை முடித்த அதிகாரிகள், மீண்டும் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என கூறி அனுப்பி விட்டனர்.

.

மூலக்கதை