பாதி வழியில் நிற்கும் பஸ்களால் பயணங்கள் முடிவதுண்டு! பராமரிக்க பயணிகள் வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
பாதி வழியில் நிற்கும் பஸ்களால் பயணங்கள் முடிவதுண்டு! பராமரிக்க பயணிகள் வலியுறுத்தல்

திருப்பூர் :திருப்பூர்- உடுமலை வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ்கள், பராமரிப்பின்றி, அவ்வப்போது பழுதடைந்து, பயணிகளின் உயிருடன் விளையாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பனியன் தொழில் வளர்ச்சி பெற்ற திருப்பூருக்கு, தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என, தினமும்,. பல ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
உடுமலை- திருப்பூர் வழித்தடத்தில், நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து, தொழிலாளர்கள், மாணவர்கள் பலர் வந்து செல்கின்றனர்.இந்த வழித்தடத்தில், 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன; ஆனால், டவுன் பஸ் வசதி இல்லை. அதனால், "மப்சல்' பஸ்களே, 27 ஸ்டாப்களில் நின்று சென்று, பயணிகளை ஏற்றி, இறக்குகின்றன.பயணிகள் எண்ணிக்கை அதிகளவு இருந்த போதும், உடுமலையில் இருந்து திருப்பூருக்கு, குறைந்த எண்ணிக்கையிலேயே, பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதனால், எல்லா நாட்களிலும், பயணிகள் நெரிசல் மிகுதியாக உள்ளது. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில், பஸ்சில், 150 பேர் வரை பயணிக்க வேண்டிய நிலை உண்டாகிறது.கூடுதல் வருவாய் இருந்தும் உடுமலை, திருப்பூர், பல்லடம் கிளைகளிலிருந்து இயக்கப்படும் பஸ்கள் பெரும்பாலும், ஓட்டை, உடைசலாகவே உள்ளன.
இயங்கி கொண்டிருக்கும் போது திடீரென பழுதடைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இவ்வாறு "மக்கர்' செய்வதால், கம்பெனிகள், பள்ளிகள், அலுவலகங்களுக்கு செல்வோர், பெரும் தவிப்புக்குள்ளாகின்றனர். பயண நேர தாமதத்தை ஈடுகட்ட, டிரைவர்கள் அதிவேகத்தில் பஸ்சை இயக்கும் போது, விபத்து அபாயமும் உள்ளது.
போக்குவரத்து கழக அதிகாரிகள் அலட்சியத்தால், இவ்வழித்தடத்தில் இயங்கும் பஸ்களை, முறையாக பராமரிக்கப்படுவதில்லை.இதனால், நடுவழியில் நிற்கும் பஸ்களால், மக்களின் அவதி தொடர்கிறது. இதனால் எரிச்சல் அடைடையும் மக்கள், அரசு பஸ்களை சிறைபிடிப்பது; மறியலில் ஈடுபடுவது போன்ற வழிகளில், தங்களின் எதிர்ப்பை காட்டுகின்றனர்.
நேற்றும் "மக்கர்'
நேற்று காலை, உடுமலையிலிருந்து கிளம்பிய அரசு பஸ், (டி.என்.,38 -என் 2553), திடீரென "இன்ஜின் ஆப்' ஆகி, பொன்னேரி அருகே நடுரோட்டில் அப்படியே நின்றது.திடீரென நின்றதால், பஸ்சுக்கு பின் வந்த, லாரி மற்றும் கார்கள் தடுமாற்றமடைந்தன. டிரைவர் சமயோஜிதமாக செயல்பட்டதால், விபத்து தவிர்க்கப்பட்டது.அதிருப்தியடைந்த பயணிகள், பின்னால் வந்த அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த பல பஸ்கள், நடுவழியில் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரம் தாமதத்துக்கு பின், மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு, பயணிகள் சென்றனர்.
பயணிகள் கூறியதாவது:உடுமலை - திருப்பூர் வழித்தடத்தில், பயணிகள் வசதிக்கேற்ப போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை; ஓடும் பஸ்களும், பராமரிப்பின்றி, மிகமிக மோசமாக உள்ளன. பஸ்சில் ஏறினால், குறித்த நேரத்துக்கு சென்றடையுமா என்ற கவலையே உண்டாகிறது.இது குறித்து பல முறை கலெக்டர், போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் பயனில்லை.இனியாவது, மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறை, போக்குவரத்து கழக அதிகாரிகள், உடுமலை- திருப்பூர் வழித்தடத்தில் இயங்கும் பஸ்களின் தரம் குறித்து ஆய்வு செய்து, கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை