சர்க்கரையில் அரிசி மாவு; அரிசியில் கற்கள் ஜோரு! ரேஷன் பொருட்களில் கலந்து ஏழை வயிற்றில் அடிக்குது அரசு

தினமலர்  தினமலர்

மேட்டுப்பாளையம்:இன்றைக்கும் அடிதட்டு மக்களின் பசி போக்க உதவுவது, ரேஷன் கடைகள்தான். ஆனால் இதே ரேஷன் கடைகளில், இப்போதெல்லாம் தேவையான பொருட்கள் கிடைப்பதில்லை; அப்படியே கிடைத்தாலும் அவை தரமற்று, கலப்படம் மிகுந்து காணப்படுவதாக, பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள, பத்து தாலுக்காக்களில், 1414 ரேஷன் கடைகள் உள்ளன. இக்கடைகளில், 9 லட்சத்து, 94 ஆயிரத்து 424 ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் பொருள் வினியோகத்தில், முறைகேடுகள் நடப்பதை தவிர்க்க, ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 7 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை கடத்தல் இன்னும் பரவலாக நடக்கிறது. கலப்படத்துக்கும் குறைவில்லை.
குறிப்பாக, அன்னுார், மேட்டுப்பாளையம், சூலுார், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட, புறநகர் பகுதி கடைகளில், ரேஷன்கடை ஊழியர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்கள் கொடுக்கும் பொருள் எவ்வளவு, மோசமான தரத்தில் இருந்தாலும், ஏழை மக்கள் அதைதான் வாங்கியாக வேண்டும் என்ற நிலை உள்ளது. சற்று தரமான பொருட்களை, கள்ள மார்க்கெட்டில் விற்று விடுவதாகவும், கலப்படம் அதிகரித்து விட்டதாகவும் பொதுமக்கள் அடுக்கடுக்காக புகார் வாசிக்கின்றனர்.
மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்., புரம், கிறிஸ்டியன் காலனி, பாரதி நகர் மக்கள் கூறியதாவது:ரேஷன் கடை ஊழியர்கள், குத்துாசியை பயன்படுத்தி அரிசி மூட்டைகளை குத்தி பார்த்து, நல்ல அரிசி மூட்டைகளை தனியாக எடுத்து வைத்து விடுகின்றனர். புழு, பூச்சி உள்ள அரிசியை மட்டும் மக்களுக்கு சப்ளை செய்கின்றனர். பொருட்கள் வாங்காமலே, வாங்கியதாக மொபைல் போனுக்கு மெசேஜ் வருகிறது.
நேரில் சென்று கேட்டால், 'தவறாக உங்கள் எண்ணுக்கு வந்திருக்கும். தற்போது கடையில் இருக்கும் பொருட்களை வாங்கிச் செல்லுங்கள்' என சமாதானம் செய்கின்றனர்.நல்ல பொருட்களை வெளி மார்க்கெட்டுக்கு, மொத்தமாக விற்பனை செய்து விடுகின்றனர். இதை சிலர் தொழிலாக செய்து வருகின்றனர். மண்ணெண்ணெய் முதலில் செல்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. 20 ம் தேதிக்கு மேல் சென்றால் கிடைப்பதில்லை. முதலில், 20 கிலோ அரிசி போட்டனர். தற்போது, 5 கிலோ அரிசி மட்டுமே வழங்குகின்றனர். சர்க்கரை விலையை குறைக்க வேண்டும். இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.
அன்னுாரில் எப்படி?
மேட்டுப்பாளையத்தில் மட்டுமல்ல, அன்னுார் வட்டாரத்திலும் ரேஷன் கடைகள் மற்றும் பொருட்கள் வினியோகம் குறித்து, ஏராளமான குற்றச்சாட்டுக்களை மக்கள் அடுக்குகின்றனர்.அன்னுார் வட்டாரத்தில், பேரூராட்சி மற்றும் 21 ஊராட்சிகளில், அன்னுார் கூட்டுறவு பண்டகசாலை மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில், ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. இங்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் தரமில்லை; எடை குறைவு, பல முறை அலைய வேண்டி உள்ளதாக, புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து நாகமாபுதுார் சுகுமார் கூறியதாவது:ரேஷன் அரிசியை பலமுறை கழுவி, சமைத்தாலும் ஒரு வாசம் வீசுகிறது. அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு என, எந்த பொருள் வாங்கினாலும், ஒரு கிலோவுக்கு, 100 கிராம் குறைவாகவே வருகிறது. துவரம் பருப்பு, ஒரு மாதம் வழங்கினால், அடுத்த மாதம் தருவதில்லை.அரிசிக்கு ஒரு முறை, பருப்பு ஒருமுறை, கோதுமைக்கு ஒரு முறை, மண்ணெண்ணெய்க்கு ஒரு முறை, என நான்கு முறை செல்ல வேண்டி உள்ளது. மாதத்தின் கடைசி வாரம் சென்றால், 'பொருள் தீர்ந்து விட்டது, அடுத்த மாதம் வாருங்கள்' என்று கூறுகின்றனர். மாத கடைசியில் சென்றாலும் பொருள் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
கடத்தலுக்கு துணை
அன்னுாரை சேர்ந்த மணிகண்டன் கூறியதாவது:இரண்டு சிலிண்டர் இருந்தால் தான், மண்ணெண்ணைய் வழங்கப்படாது. ஆனால் அன்னுாரில், ஒரு சிலிண்டர் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு, மண்ணெண்ணைய் மறுக்கப்படுகிறது. ரேஷன் அரிசி கடத்தலுக்கு, சில ஊழியர்கள் துணை போகின்றனர்.
கோதுமை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தான் வழங்குகின்றனர். ரேஷன் பொருள் வாங்கச் சென்றால், டீத்துாள், சோப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க, நிர்பந்தப்படுத்துகின்றனர். வாசம் அடிக்கும் ரேஷன் அரிசியை, பலர் அரைத்து மாட்டுக்கு கொடுக்கின்றனர். சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களை பாக்கெட் செய்து தர வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
'சப்ளை குறைந்து விட்டது'
மேட்டுப்பாளையம் வட்ட வழங்கல் அலுவலர் சுகுணா கூறியதாவது: மேட்டுப்பாளையம் தாலுகாவில், 119 ரேஷன் கடைகள் உள்ளன; 78 ஆயிரத்து, 335 கார்டுகள் உள்ளன. பொருட்களின் தேவையை விட, 70 சதவீதம் அளவுதான், கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. கடைகளில் பொருட்கள் இருப்பை பொறுத்து, ஒவ்வொரு மாதமும் பொருட்களின் எடை அளவு மாறுபடும். கடந்த மாதம், 73 ஆயிரத்து 993 கிலோ துவரம்பருப்பு தேவையாக இருந்தது. ஆனால், 55 ஆயிரத்து, 753 கிலோ பருப்புதான் வந்தது. ரேஷன் கடைகளில் சப்ளை சரியில்லை என, புகார்கள் ஏதும் வருவதில்லை. ஏதேனும் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
பலருக்கு உண்டு; சிலருக்கு இல்லை
ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் கூறியதாவது:பொருட்களை எடை குறைத்து போடுவதாக கூறுவது தவறு. ஒவ்வொரு கடைக்கும் பொருட்கள் குறைவாகத்தான் சப்ளை செய்கின்றனர். அதை அனைவருக்கும் வழங்க வேண்டியதுள்ளதால், இந்த மாதம் பருப்பு, பாமாயில் வாங்கியவர்களுக்கு, அடுத்த மாதம் வழங்குவதில்லை. இவ்வாறு செய்யக்கூடாதுதான். ஆனாலும் அனைவருக்கும் விலை குறைவான பொருட்கள் வழங்க வேண்டி இருப்பதால், இது மாதிரி சப்ளை செய்கிறோம். மொத்தமாக வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வதாக கூறுவது, முற்றிலும் தவறு.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
'எடை அளவு குறைவு'
ரேஷன் பொருள் வாங்க வந்த ஜெயமணி கூறுகையில், ''அரிசி, சர்க்கரை ஆகியவை நிர்ணயம் செய்த அளவு போடுகின்றனர். ஆனால், துவரம்பருப்பு, பாமாயில் ஆகிய பொருட்கள், ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் தான் போடுகின்றனர். இது குறித்து கேட்டால், தங்களுக்கு வழங்கப்படும் அளவு இவ்வளவுதான் என்று கூறுகின்றனர். அப்படியே போட்டாலும், சரியான அளவில் இருப்பதில்லை. ஏதாவது கேட்டால் அடுத்த மாதம் நமக்கு பொருட்கள் இல்லை என சொல்லி விடுவார்களோ என, எதையும் கேட்காமல், வழங்கும் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டியுள்ளது,'' என்றார்.
சர்க்கரையில் அரிசி மாவு
சூலுாரில் உள்ள ரேஷன் கடைகளில், சர்க்கரையில் அரிசி மாவை கலப்படம் செய்வதாகவும், கடலை, டீத்துாள் உள்ளிட்ட பொருட்களை கட்டாயம் வாங்க, நுகர்வோர் வற்புறுத்தப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். சர்க்கரை மட்டும் வாங்கிகொண்டு மற்ற பொருட்களான அரிசி, கோதுமை வேண்டாம் என்று சொல்லும் போது, அதற்கும் சேர்த்து பில் போடுவதாகவும் புகார் உள்ளது. அப்படி வாங்காத பொருட்கள், கள்ள மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. மசூர் பருப்பு வேண்டாம் என்று கூறினால், அதை வாங்கினால் தான் மற்ற பொருட்கள் வழங்குவோம் என கடைக்காரர்கள் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

மூலக்கதை