ஆற்றுப்படுகை, மணல் மேடுகளில் கனிம வளம்... கபளீகரம்! கண்டும் காணாத அதிகாரிகள்

தினமலர்  தினமலர்
ஆற்றுப்படுகை, மணல் மேடுகளில் கனிம வளம்... கபளீகரம்! கண்டும் காணாத அதிகாரிகள்

நொய்யல் ஆற்றுப் படுகையில் மணலும், நரசீபுரம் கிராமப் பகுதிகளில் 'கிராவல் மண்'ணும் பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்தி, டிப்பர் லாரிகளில், இரவு - பகலாக கடத்தப்படுகிறது. தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.
கோவை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான நொய்யல் ஆற்றுப் படுகையில், மணல் அள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தடையை மீறி, நொய்யல் துவங்கும் இடமான ஆலாந்துறை கூடுதுறை பகுதியிலிருந்து, 6 கி.மீ., துாரத்திலுள்ள சித்திரைச்சாவடி அணைப்பகுதி வரை, நள்ளிரவில், மாட்டு வண்டிகளில் மணல் கடத்துகின்றனர்.
மணலை கரையோரத்தில் ஓரிடத்தில் சேகரித்து, அங்கிருந்து லாரிகள் மற்றும் மினி லாரிகளில் ஏற்றி கோவையில் உள்ள சில பகுதிகளுக்கும், கேரளாவிற்கும் கடத்திச் செல்கின்றனர். இதைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், தனியார் அப்பார்ட்மென்ட்கள் மற்றும் கோசாலைகள் அமைக்க நிலத்தின் மேடு பள்ளங்களை சீரமைக்கவும், வீடு கட்டும்போது 'பேஸ்' மட்டம் அமைக்கவும், பாழடைந்த கிணறுகளை மூடவும், சாலைகளை உயர்த்தவும் பயன்படுத்தப்படும் 'கிராவல் மண்' கடத்தலும் தற்போது அதிகரித்துள்ளது. கனிமவளங்களை கொள்ளை அடித்து, காசு பார்க்கும் ஒரு கூட்டமே இதன் பின்னணியில் செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு உடந்தையாக, அரசு அதிகாரிகள் சிலரும் செயல்படுகின்றனர்.
குறிப்பாக, தொண்டாமுத்துார் வட்டாரத்தில், நரசீபுரம், ஜாகிர் நாயக்கன்பளையம், தேவராயபுரம், வண்டிக்காரனுார், பூலுவப்பட்டி, தென்கரை போன்ற பகுதிகளில், பள்ளவாரிகளில் கிராவல் மண் அதிகளவில் உள்ளது. இப்பகுதிகளில், இரவு நேரங்களில், மாட்டு வண்டி, டிராக்டர்கள் மூலம் கிராவல் மண் கடத்தப்பட்டு வந்தது.கிராவல் மண் கடத்தப்படுவதால், இயற்கை வளம் பாதிப்பதோடு, அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுவிடும். இதுவரை தொண்டாமுத்துார் சுற்றுவட்டாரத்தில் மண் கடத்தப்பட்டதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, பல ஆயிரம் ஏக்கரில் செய்யப்பட்ட விவசாயம் தற்போது சில நுாறு ஏக்கராக சுறுங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது நரசீபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆத்துார், பெரியாற்றுப்பாலம் அருகே, பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி மண் வெட்டி எடுக்கப்பட்டு, லாரி மற்றும் டிராக்டர்களில் கடந்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக இரவு -- பகலாக மண் கடத்தல் தொடர்ந்தும், அதை தடுக்க வேண்டிய அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பல சந்தேகங்களுக்கு வலிவகுத்துள்ளது.
இதுகுறித்து, நரசீபுரம் மக்கள் கூறியதாவது:தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகளில் மணல், மண் கடத்தப்படுகிறது. மண் எடுக்கப்படும் இடத்திலிருந்து, 1 கி.மீ., துாரத்தில்தான், வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது. இதன் வழியேதான் டிப்பர் லாரிகள், டிராக்டர்கள், மணல், மண் எடுத்துச் செல்கின்றன. தற்போதைய நிலவரப்படி, ஒரு லோடு மணல், ரூ.50 ஆயிரம் வரையும், கிராவல் மண், ரூ.4,000 வரையும் விற்கப்படுகிறது.
மணல், மண் கடத்தலை தடுக்க அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு அதிகாரிகள் ரோந்து செல்ல அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், எங்கள் பகுதியில் இதுவரை அதிகாரிகள் ரோந்து வந்ததில்லை. மணல் மற்றும் மண் கடத்தலை உடனடியாக தடுக்க, மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து கோவை தெற்கு கோட்டாட்சியர் மதுராந்தகியிடம் கேட்டபோது:கோவை மாவட்டத்தில் நீர்நிலைகள், ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளக்கூடாது. கிராவல் மண்ணும் அள்ளக் கூடாது. இவை இரண்டும் குற்றம்.
இது தொடர்பாக கோவை தெற்கு கோட்டத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக நொய்யல் துவங்கும் இடத்திலிருந்து 6 கி.மீ., தொலைவுக்குட்பட்ட பகுதிவரை, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் போலீசாரை கொண்டு, ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில கிராமங்களில், சுவரொட்டிகள் ஒட்டி எச்சரித்துள்ளோம்.
விதிகளை மீறி மணல், மண் கடத்தலில் ஈடுபடுபவர்கள், மணலை கடத்தி, வீடுகளிலும்,தோட்டங்களிலும் பாதுகாத்து வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மணல் வைத்திருப்பவர்கள் அதற்கான ரசீதுகளை வைத்திருப்பது அவசியம்.மணல் அள்ளுபவர்களுக்கு, ரூ.25 ஆயிரம் அபராதமும், யூனிட்டுக்கு, ரூ.1,500 அபாரதமும் விதிப்பதோடு, கடத்தலுக்கு பயன்படுத்தும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
தொடர்ந்து இதே முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்டால், கடத்தல்காரருக்கு அபராதம் விதிப்பதோடு, அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.மக்கள் அனைவரும் இயற்கையை நேசிக்க பழகிக்கொள்வதோடு, அதை பாதுகாக்கவும் முயற்சிக்க வேண்டும். மணல் மற்றும் மண் அள்ளுவது குறித்து உள்ளூர் போலீசிலோ, வருவாய்ஆய்வாளர், கிராமநிர்வாக அலுவலரிடமோ புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
நடவடிக்கை உறுதியாம்!
இதுகுறித்து நரசீபுரம் ஊராட்சி வி.ஏ.ஓ., சரவணனிடம் கேட்டதற்கு, ''மணல், மண் கடத்தல் குறித்து தாசில்தாருக்கு புகார் மனு அளித்துள்ளேன்,'' என, மிகச் சுறுக்கமாகக் கூறி, அழைப்பைத் துண்டித்தார்.
பேரூர் தாசில்தார் முரளி கூறுகையில், ''அனுமதியின்றி மண் எடுக்கப்பட்டது குறித்து, விரிவான விசாரணை அறிக்கையை கொடுக்குமாறு, நரசீபுரம் வி.ஏ.ஓ., சரவணனுக்கு உத்திரவிட்டுள்ளேன். முழு விசாரணைக்கு பின், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுபோன்று மண் அள்ளப்படும் இடங்களை கண்டறிந்து ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும்; போலீசாரின் உதவியுடன் கடத்தல் தடுக்கப்படும்,'' என்றார்.- நமது நிருபர் குழு -

மூலக்கதை