திருப்பதி ஏழுமலையானை இலவச திட்டத்தில் பக்தர்கள் விரைவாக தரிசிக்க ஏற்பாடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்பதி ஏழுமலையானை இலவச திட்டத்தில் பக்தர்கள் விரைவாக தரிசிக்க ஏற்பாடு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை நீண்ட நேரம் காத்திருக்காமல் பக்தர்கள் விரைவாக தரிசிக்கும் வகையில் புதிய திட்டத்திற்கான சோதனை முறை வரும் டிசம்பர் 2வது வாரத்தில் அமல்படுத்தப்பட உள்ளது. திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு அளித்த பேட்டி: ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதில் ஒரு கட்டமாக இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் வரிசைகளிலும் வைகுண்டம் காத்திருப்பு அறைகளிலும் நீண்ட நேரம் காத்திருக்கும்போது பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.

எனவே இவர்களுக்காக டிசம்பர் 2வது வாரத்தில் திருமலையில் 25 இடங்களில் 150 கவுன்டர்கள் அமைத்து டோக்கன் வழங்கப்பட உள்ளது.

இந்த டோக்கன்களில் உள்ள குறிப்பிட்ட நேரத்திற்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வைகுண்டத்தில் இருந்து 1 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்து வைக்கப்படும்.

இந்த திட்டம் சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளது. பின்னர் இதுகுறித்து பக்தர்களிடம் கருத்து கேட்டு மாற்றங்கள் செய்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து முழுவதுமாக நேர ஒதுக்கீடு செய்து தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர்.

டிசம்பர் 29ம்தேதி வைகுண்ட ஏகாதசி என்பதால் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை டிசம்பர் 20ம்தேதிக்குள் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


.

மூலக்கதை