கர்நாடகாவில் டாக்டர்கள் ஸ்டிரைக் 5 நோயாளிகள் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடகாவில் டாக்டர்கள் ஸ்டிரைக் 5 நோயாளிகள் பலி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுவரும் தனியார் மருத்துவமனை டாக்டர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, 5 நோயாளிகள் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் உள்ள  தனியார் மருத்துவமனைகள் திருத்த சட்ட மசோதாவை விரைவில் தாக்கல் செய்ய அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இதன்படி, தனியார் மருத்துவமனைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து அரசுக்கு தெரிவிக்க மாவட்ட அளவில் மருத்துவமனைக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். கட்டணத்தை அரசே நிர்ணயிக்கும்.

தவறான சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். சிகிச்சையில் குறைபாடு இருந்தால் தனியார் மருத்துவமனை மீதும் அரசு நடவடிக்கை எடுக்கும்.

இந்த மசோதாவுக்கு இந்திய மருத்துவச் சங்கம், கர்நாடக தனியார் மருத்துவமனைகள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதை கண்டித்து கடந்த 3-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்திய நிலையில், கடந்த 3 தினங்களாக பெல்காமில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக, நேற்று முன்தினம் இரவு பாகல் கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் விபத்து மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 5 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லை. உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால் இந்த மாவட்டத்தில் 3 ேபர் உயிரிழந்தனர்.

இதேபோல நேற்று தும்கூரு, சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தலா ஒருவர் பலியாயினர். கர்நாடகாவில் மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் 5 நோயாளிகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முதல்வர் சித்தராமையா மருத்துவர் கூட்டமைப்பு நிர்வாகிகளை சந்தித்து, போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

அப்போது ‘கர்நாடக தனியார் மருத்துவமனைகள் திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றக்கூடாது என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதை சித்தராமையா ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதனிடையே சுகாதாரத் துறை அமைச்சர் ரமேஷ் குமார் நேற்று மாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

உடனடியாக பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் மீது ‘எஸ்மா’ உள்ளிட்ட சட்டத்தை பயன்படுத்தப்போவதாகவும் எச்சரித்ததாக தெரிகிறது.

.

மூலக்கதை