மோடியை துக்ளக்குடன் ஒப்பிட்ட யஷ்வந்த் சின்கா

தமிழ் முரசு  தமிழ் முரசு
மோடியை துக்ளக்குடன் ஒப்பிட்ட யஷ்வந்த் சின்கா

புதுடெல்லி: பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முகமது பின் துக்ளக் நடவடிக்கையுடன் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த்சின்கா ஒப்பிட்டு பேசியிருப்பது பாஜ தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்கா பேசியதாவது:  வரலாற்றில் மன்னர்கள் பலர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பழைய நாணயத்தை தடை செய்து விட்டு புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். பணமதிப்பு நீக்கம் 700 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தது.

இதனை மேற்கொண்ட மன்னர் முகமது பின் துக்ளக். தலைநகரை டெல்லியிலிருந்து தவுலதாபாத்துக்கும் பின்னர் டெல்லிக்கும் மாற்றியதன் மூலம் வரலாற்றில் கோமாளியாக பேசப்பட்டார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை முக்கியமானது என்று கருதியதனால்தானோ என்னவோ ஆர்பிஐ கவர்னர், நிதியமைச்சருக்குப் பதிலாக பிரதமரே அதனை அறிவித்தார்.

அவரது உரையில் கறுப்புப் பணம் 74-75 முறை கூறப்பட்டது. பிறகு ஒருவரிடமும் பணம் இல்லை, நாடு ஏற்கெனவே ரொக்கமற்றதாகி விட்டது, அப்போது ரொக்கமற்ற பொருளாதாரம் பற்றி பேசினார்.

சுமார் 18 லட்சம் டெபாசிட்கள் மீது விசாரணை நடக்கிறது என்று  கூறினார். இதன் மூலம் உலகம்பூராவும் இந்தியா திருடர்களின் நாடு என்ற செய்தியே பரவியது.

நாம் அனைவரும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் போலும்! ஒருவருமே நேர்மையானவர்கள் இல்லை போலும்! இந்த ஒட்டுமொத்த பணநீக்கச் செயல்பாடும் நாட்டுக்கு ரூ. 3. 75 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறு சின்கா பேசினார்.



அண்மைக்காலமாக பாஜவை சின்கா கடுமையாக விமர்சித்து வருகிறார். இவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என பல பாஜ தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

யஷ்வந்த் சின்காவும், சத்ருகன் சின்காவும் பாஜவிலிருந்து விலக வேண்டும் என தெலங்கானா பாஜ தலைவர் கிருஷ்ண சாகர் ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.


.

மூலக்கதை