"மைக்' மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு சிக்னல்... சிரிப்பு... சிறப்பு! வரவேற்பை பெற்றுள்ள போலீசாரின் அணுகுமுறை!

தினமலர்  தினமலர்
மைக் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு சிக்னல்... சிரிப்பு... சிறப்பு! வரவேற்பை பெற்றுள்ள போலீசாரின் அணுகுமுறை!

திருப்பூர்:திருப்பூர் நகர சிக்னல்களில், "மைக்' மூலம் போக்குவரத்து போலீசார், கனிவாகவும், கம்பீரமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது, வாகன ஓட்டிகளின் வரவேற்பை பெற்றுள்ளது.
"சிக்னல பார்த்து வாங்க சார்...; கோட்டை தாண்டி பைக்கை நிறுத்தாதீங்க; சிவப்பு காருல இருக்குறவுரு, "சீட்' பெல்ட் போடுங்க; லாரி டிரைவர், ரைட்டில் ஏறி வாங்க' - இதுபோன்ற அவசியமான அறிவுரைகள், ஏதோ கருத்தரங்கில் சொல்லப்படுவதாக நீங்கள் கருத வேண்டாம்.திருப்பூரில் உள்ள பிரதான சிக்னல்களில், போக்குவரத்து போலீசாரின் கம்பீரமான குரல்களே, இவ்வாறு ஒலிக்கிறது.
பின்னலாடை துறை நகரான திருப்பூரில், தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகியுள்ளன.உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ்கள், வாடகை கார், ஆட்டோக்கள், பள்ளி, கல்லூரி பஸ்கள், பனியன் நிறுவன வாகனங்கள் என, திருப்பூர் நகரின் ரோடுகள், எந்நேரமும் பரபரப்பாகவே உள்ளன.
நகரின் முக்கிய ரோடுகள் அனைத்தும், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் திண்டாடுவது, அன்றாட நிகழ்வாகிவிட்டது. நெரிசலை ஒழுங்குபடுத்தவும், வாகனங்கள் முறையாக செல்லவும், நகரின் முக்கிய பகுதிகளில், போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் நின்று, கண்காணித்து வருகின்றனர்.
சென்னை, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களில், போக்குவரத்து போலீசார் பயன்படுத்தும் அதிநவீன "மைக்', தற்போது திருப்பூர் மாநகர போலீசாருக்கும் வழங்கப்பட்டுள்ளது."சிக்னல்'களில் நிற்கும் வாகன ஓட்டிகள், விதிகளை மீறாமல் இயங்குவதை கண்காணிக்கவும், பாதசாரிகள் ரோட்டை கடக்க உதவும் வகையில், போக்குவரத்து சிக்னல்களில், போலீசார் இந்த "மைக்'கை பயன்படுத்தி வருகின்றனர்.
சிக்னல்களில், போலீசார் சுறுசுறுப்பாக, அங்குமிங்குமாக நடமாடியபடி, "ஹெல்மெட்' அணிவது, "சீட் பெல்ட்' போடுவது, சிக்னல்களை மதிப்பது என, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வழக்கமாக, விளம்பரங்களுக்கு மத்தியில் வரும் விழிப்புணர்வு அறிவுரைகளைவிட, போக்குவரத்து போலீசார், தங்களது மிடுக்கான குரலில், வாகன ஓட்டிகளுக்கு அன்பாக எடுத்துரைப்பது, பலரின் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுபோன்ற புன்முறுவலான அறிவிப்பு, விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கையாக இருந்தாலும், இந்த அணுகுமுறையை இன்முகத்தோடு வரவேற்றுள்ளனர்.போக்குவரத்து போலீசார் கூறியதாவது:போலீஸ் கமிஷனரின் முயற்சியில், திருப்பூருக்கு, "கார்டுலஸ் மைக்' வாங்கப்பட்டுள்ளது. அதில், போக்குவரத்து போலீசாருக்கு, 23 "மைக்' வழங்கப்பட்டுள்ளது. இது, "சார்ஜ்' போட்டு பயன்படுத்தும் வகையில் உள்ளது. "பென்ரைவ்' பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு வசதிகள், இந்த "மைக்'கில் உள்ளது.
இதன்மூலம், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், விதிமீறும் வாகன ஓட்டிகளை எச்சரிப்பது உள்ளிட்ட பணிகள் எளிதாக உள்ளன. இது, அவர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை