இருக்கு ஆனால் இல்லை! அணைகளில் போதுமான நீர் இருப்பு :இணைப்பு வழங்க மாநகராட்சி மறுப்பு

தினமலர்  தினமலர்
இருக்கு ஆனால் இல்லை! அணைகளில் போதுமான நீர் இருப்பு :இணைப்பு வழங்க மாநகராட்சி மறுப்பு

கோவை:சிறுவாணி, பில்லுார், ஆழியாறு அணைகளில் போதுமான அளவு நீர் இருப்பு இருந்தும் கூட, புதிதாக குடிநீர் இணைப்பு வழங்க, மாநகராட்சி மறுத்து வருகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் விண்ணப்பித்து, வரிசையில் காத்திருக்கின்றனர்.
'மேலிட உத்தரவு' என, சப்பைக்கட்டு காரணம் கூறி, மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் நழுவுகின்றனர்.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்போருக்கு, சிறுவாணி, பில்லுார் மற்றும் ஆழியாறு அணைகளில் இருந்து நீர் எடுத்து, சப்ளை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு, இரு பருவ மழையும் பொய்த்ததால், அணைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.
நகர்ப்பகுதியில், 15 நாட்களுக்கு ஒருமுறையும், இணைக்கப்பட்ட பகுதிகளில், மாதத்துக்கு ஒருமுறையும் குடிநீர் வழங்கப்பட்டது. கடுமையான வறட்சி நிலவியதால், புதிதாக குடிநீர் இணைப்பு வழங்குவது, கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறுத்தப்பட்டது.நடப்பாண்டு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே, தட்டுப்பாடின்றி மக்களுக்கு வினியோகிக்க முடியும். இல்லையெனில், அருகாமை மாநிலங்களில் இருந்து, ரயிலில் தண்ணீர் கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்படும் என, அதிகாரிகள் அச்சப்பட்டனர்.
வருண பகவானை வேண்டி, சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சிறப்பு பூஜை நடத்தினர். அதன்பின், நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஜூன், ஜூலையில், அணைப்பகுதியில் கன மழை பெய்தது. தென்மேற்கு பருவ மழை காலத்தில் மட்டும், 2,800 மி.மீ., மழை கிடைத்தது. சிறுவாணி அணையின் மொத்த உயரமான, 50 அடியில், 48 அடிக்கு தண்ணீர் தேங்கியது. அதனால், தற்போது தினமும், 8 முதல் 9 கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்படுகிறது.
ஆழியாறு அணையில், 89.30 அடிக்கு (மொத்த கொள்ளளவு - 120 அடி), பில்லுார் அணையில், 89.5 அடிக்கு (மொத்த கொள்ளளவு - 100 அடி) நீர் இருப்பு உள்ளது. கோவைக்கு மிக முக்கிய நீராதாரமாக கருதப்படும், இம்மூன்று அணைகளிலும் போதுமான நீர் இருப்பு இருந்தும், மாநகராட்சி பகுதிகளில், ஓராண்டாக புதிதாக குடிநீர் இணைப்பு வழங்கப்படுவதில்லை.புதிதாக குடிநீர் இணைப்பு பெற, 'டிபாசிட்' தொகை, மேற்பார்வை கட்டணம், சேவை கட்டணம், வரைபட அனுமதிக்கு மாறாக கட்டடம் கட்டியிருந்தால், குடிநீர் இணைப்பு கொடுக்க, 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்.
இத்தனை நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, கேட்கும் தொகையை செலுத்தியும் கூட, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இன்னும் இணைப்பு கிடைக்காமல், அல்லாடுகின்றனர்.பொறியியல் பிரிவு உயரதிகாரிகளிடம் முறையிட்டால், மண்டல அலுவலகம் சென்று, உதவி கமிஷனரை சந்திக்கச் சொல்கின்றனர். அவரை சந்தித்தால், உதவி நிர்வாக பொறியாளரையோ அல்லது, சம்பந்தப்பட்ட வார்டு இளம் / உதவி பொறியாளரையோ சந்திக்கசொல்கின்றனர். அவர்களை சந்திக்க முற்பட்டால், அலுவலக வேலையாக இருப்பதாக, வெவ்வேறு இடங்களை குறிப்பிட்டு, 'எஸ்கேப்' ஆகின்றனர்.
அவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டால், 'மீட்டிங்கில் இருக்கிறோம்; பிறகு பேசுகிறோம்' என கூறி, இணைப்பை துண்டிக்கின்றனர். உயரதிகாரிகளுக்கு நெருக்கமானவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்தாலும் கூட, 'மேலிட உத்தரவு' என கூறி, மாநகராட்சியில் உள்ள அனைத்து பிரிவு அலுவலர்கள், அதிகாரிகளும் பின்வாங்குகின்றனர். பொதுமக்களோ, குடிநீர் இணைப்பு கிடைக்காமல் அல்லாடுகின்றனர்.உரிமம் பெற்ற பிளம்பர்கள் கூறுகையில், 'ஓராண்டாக எவ்வித வேலையும் இல்லாமல் இருக்கிறோம். பொதுமக்களின் நிலைமையை உணர்ந்து, புதிய குடிநீர் இணைப்பு வழங்க, உயரதிகாரிகள் முன்வர வேண்டும்' என்றனர்.
முடியாத சூழல்!
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'புதிதாக இணைப்பு கொடுத்தால், மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். 50 கோடி ரூபாய் வரை வருவாய் அதிகரிக்கலாம். அணைகளில் போதிய அளவு நீர் இருப்பு இருக்கிறது; ஆனால், இணைப்பு கொடுக்க முடியாத சூழலில் உள்ளோம்' என்றனர்.

மூலக்கதை