ராணுவ வளாகத்தில் இருந்த மயான நிலம் மாநகராட்சி வசம்... ஒப்படைப்பு!

தினமலர்  தினமலர்
ராணுவ வளாகத்தில் இருந்த மயான நிலம் மாநகராட்சி வசம்... ஒப்படைப்பு!

ராணுவ வளாகத்தில் இருந்த, 2.12 ஏக்கர் மணப்பாக்கம் மயான நிலம், முறையாக சென்னை மாநகராட்சி வசம்ஒப்படைக்கப்பட்டுள்ளதால், சடலங்களை கொண்டு செல்வதில், கடந்த, ஐந்து ஆண்டுகளாக நீடித்து வந்த பெரும் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. விரைவில் இந்த மயானத்தை மேம்படுத்த மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது.

ஆலந்துார் மண்டலம், 157வது வார்டு, மணப்பாக்கத்தில் சர்வே எண்: 239, 215, 216/1ல் மயானம் அமைந்துள்ளது. இங்கு மணப்பாக்கம் பகுதிவாசிகள் சடலங்களை அடக்கம் செய்கின்றனர். இந்த மயானத்திற்கு செல்லும் பாதை, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.கடந்த, 2012ல் ராணுவ வளாகத்தில் இருந்த குடியிருப்பு நிலங்களை பாதுகாக்க, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. அப்போது மயானத்துக்கு செல்லும் பாதையை மறித்து, ராணுவத்தினர் தடுப்பு சுவர் கட்டினர்.

பாதையில் ஒரு தடுப்பு கதவு அமைக்கப்பட்டது. அதன்பின், ராணுவ அதிகாரிகள் அனுமதியுடன் தான், சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.சடலம் கொண்டு செல்லும்போது, சாலையில் பூ போடுவது, மேளம் அடிப்பது, ஆடுவது போன்ற நிகழ்வுக்கும் ராணுவம் தடை போட்டது.இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு, திடீரென மயானத்திற்கு செல்லும் பாதையை திறக்காமல், ராணுவத்தினர் பிரச்னை செயதனர். இதனால் பெரும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் தலையிட்டு மயான பாதையை ராணுவத்தினர் திறந்தனர்.

சடலம் கொண்டு செல்லும் போது, ஒவ்வொரு முறையும் இந்த பிரச்னை ஏற்பட்டதால், நிரந்தர தீர்வுக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து, சர்ச்சைக்குரிய நிலத்திற்கான வருவாய் ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதில், மயான நிலம் மற்றும் மயானத்திற்கு செல்லும் பாதை, மாநில அரசுக்கு சொந்தமானது என தெரியவந்தது. இந்த நிலத்தை முறையாக பெற்று, மாநகராட்சி வசம் ஒப்படைக்க வசதியாக, ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்இடையே முத்தரப்பு பேச்சு நடந்தது.

பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ராணுவ வளாகத்தில் இருந்த மயான பயன்பாட்டில் இருந்த 2.12 ஏக்கர் நிலத்தையும், மயானத்திற்கு செல்லும் பாதையையும் தனியாக ஒதுக்கி வழங்க முடிவு செய்யப்பட்டது.மயானத்திற்கு செல்ல, மணப்பாக்கம் பிரதான சாலையில் இருந்து, 20 அடி அகலம், 120 மீட்டர் நீளத்தில் பாதை ஒதுக்கப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் வருவாய்த்துறை சர்வேயர்கள் மூலம் அளந்து, மயான நிலம் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மயான நிலத்திற்கு தடுப்பு சுவர் கட்ட, 1.26 கோடி ரூபாய்க்கு மாநகராட்சி மதிப்பீடு தயாரித்துள்ளது. இதில், ஒன்பது அடி உயர தடுப்பு சுவர் கட்டப்படும்.ஆறு அடி உயரத்தில் கட்டுமானமும், அதன் மேல் மூன்று அடி உயரத்தில், இரும்பு கிரில் அமைக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஐந்தாண்டு காலமாக நீடித்து வந்த மணப்பாக்கம் மயான பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

இனி பிரச்னை இல்லை!
மயானத்தை சுற்றி ராணுவ இடம் உள்ளதால், பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தடுப்பு சுவரின் மேல், இரும்பு கிரில் அமைக்கிறோம். மதிப்பீடு தயார் செய்த கோப்புகளை, மேல் அதிகாரிகள் கவனத்திற்கு அனுப்பி உள்ளோம். மழைக்காலம் முடிந்ததும், நிதி ஒதுக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம். விரைவில் இந்த மயானம் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். நிலம் மாநகராட்சி வசம் வந்துள்ளதால், இனி சடலங்களை கொண்டு செல்வதில் எந்த பிரச்னையும் இருக்காது.
-மாநகராட்சி அதிகாரிகள்

- நமது நிருபர் -

மூலக்கதை